ஐபோனுக்கும் பைக்குக்கும் ஆசைப்பட்டு தாத்தாவையே தீர்த்துக்கட்டிய 13 வயது சிறுமி...! வெளியான பகீர் பின்னணி...!
13 year old girl who killed her grandfather wanting iPhone and bike background story revealed
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவற்றா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 65 வயது முதியவர் ஒருவர், தனது மனைவி, மகள் மற்றும் 13 வயது பேத்தியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், முதியவரின் மகள் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவருக்கு துணையாக முதியவரின் மனைவியும் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

இதனால் வீட்டில் முதியவரும் அவரது 13 வயது பேத்தியும் மட்டும் இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக முதியவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டிற்குள் சடலமாக கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததுடன், உடல் ஓலைப்பாயால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முதியவர் அணிந்திருந்த 3 பவுன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த பணமும் காணாமல் போயிருந்தது. இதனால் நகை, பணத்திற்காக நடந்த கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணையை தொடங்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஹரிப்பாடு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். செல்போன் கோபுரத் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 13 வயது சிறுமியுடன் இளைஞர் ஒருவர் அடிக்கடி தொடர்பில் இருந்தது காவலர்களின் கவனத்திற்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில், கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், முதியவரின் 13 வயது பேத்தி திட்டமிட்டு தனது நண்பரையும், அவருடன் தொடர்புடைய மேலும் சிலரையும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபடுத்தியதாகத் தெரியவந்துள்ளது.
13 வயது சிறுமிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞருக்கும் இடையே தொடர்ந்து கைபேசி மூலம் தொடர்பு இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுமிக்கு விலை உயர்ந்த கைபேசி வாங்க வேண்டும் என்ற ஆசையும், அந்த இளைஞருக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்காக பணம் தேவைப்பட்ட நிலையில், இருவரும் பணத்தை எவ்வாறு பெறுவது என்பது குறித்து பேசியதாகவும், அதன் பின்னர் முதியவரை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
திட்டத்தின்படி அந்த இளைஞர் மேலும் இருவருடன் சேர்ந்து வீட்டிற்குள் சென்று முதியவரை தாக்கி கொலை செய்ததாகவும், பின்னர் அவரது நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.இந்த கொலை சம்பவம் தொடர்பாக 13 வயது சிறுமி உள்ளிட்ட 4 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் பின்னணி மற்றும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
13 year old girl who killed her grandfather wanting iPhone and bike background story revealed