'என் புதைகுழியை நானே தோண்டுகிறேன்.விடுதலை பெற்று நான் தூங்குவதற்கு நேரம் நெருங்கி வருகிறது': இஸ்ரேலிய பிணைக்கைதியின் கண்ணீர் வீடியோ: ஹமாஸ் வெளியிட்டு அதிர்ச்சி..!
Hamas releases tearful video of Israeli hostage digging his own grave
காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது: 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 07-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் பல ஆயிரம் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பிணைக்கைதியான எவியத்தார் டேவிட் காசாவில் தனது சொந்த புதைகுழியை தோண்டிக் கொள்ளும் அதிர்ச்சி வீடியோவை ஹமாஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் பிடித்து சென்ற பிணைக்கைதிகளை மீட்க தான் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் போரை தொடங்கியது. அதில், 250 பிணைக்கைதிகளில் பலர் இறந்து விட்ட நிலையில், பலர் மீட்கப்பட்டனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் வசம் இருக்கின்றனர்.

இந்நிலையில், ஹமாஸ் பிடியில் உள்ள மொத்த பிணைய கைதிகளை விடுவித்தால் மாத்திரமே போரை நிறுத்துவோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால், படிப்படியாக தான் விடுவிப்போம் என்று ஹமாஸ் தரப்பு கூறி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலை பணிய வைக்க தங்கள் வசம் இருக்கும் பிணைக்கைதி ஒருவரின் அதிர்ச்சி வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. எவ்யதார் டேவிட் என்ற 24 வயதுடைய இவர் ஜெர்மன் மற்றும் இஸ்ரேல் குடியுரிமை வைத்துள்ளார்.
இவர் சுரங்கப்பாதை ஒன்றில் டேவிட் மண்வெட்டியுடன் , தனது புதைகுழியை தானே தோண்டிக் கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. எலும்பும் தோலுமாக, மெலிந்த உடலுடன் காணப்படும் டேவிட் வீடியோவில் கூறியுள்ளதாவது:
''நான் இப்போது என் புதைகுழியை தோண்டுகிறேன். ஒவ்வொரு நாளும், என் உடல் பலவீனமடைந்து வருகிறது. நான் நேரடியாக என் கல்லறைக்கு நடந்து செல்கிறேன். நான் அடக்கம் செய்யப்படப் போகும் கல்லறை இருக்கிறது. விடுதலை பெற்று நான் தூங்குவதற்கு நேரம் நெருங்கி வருகிறது. இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.
குறித்த அதிர்ச்சி வீடியோவை பார்த்த அந்த இளைஞரின் குடும்பத்தினர் இஸ்ரேல் அரசாங்கத்திடமும், உலக சமூகத்திடமும் டேவிட்டைக் காப்பாற்ற முடிந்த அனைத்தையும் செய்யுமாறு உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வீடியோவைக் கண்டித்து, ஹமாஸ், டேவிட்டை வேண்டுமென்றே பட்டினி போட்டுக் கொன்று வருவதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, டேவிட் குடும்பத்தினரிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனைத்து பிணைக்கைதிகளையும் திரும்பக் கொண்டு வர தனது அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக உறுதியளித்துள்ளார்.
English Summary
Hamas releases tearful video of Israeli hostage digging his own grave