டொராண்டோவில் துப்பாக்கி சூடு...! - இந்திய மாணவர் சிவாங்க் அவஸ்தி உயிரிழப்பு...!
Gunfire Toronto Indian student Shivang Awasthi dies
கனடாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த துயர மரணம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சிவாங்க் அவஸ்தி (20), கனடாவில் உள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த நிலையில், துப்பாக்கி சூடு தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
நேற்று, டொராண்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகே, சிவாங்க் அவஸ்தி உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்ததை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்தனர்.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மாணவர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட ஹைலேண்ட் கிரீக் டிரெயில் – ஓல்ட் கிங்ஸ்டன் சாலை பகுதியில், சம்பவத்திற்கு முன் சிலருக்கிடையே தகராறு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோதலின் போது, மர்ம நபர்கள் சிவாங்க் அவஸ்தியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த துயர சம்பவம் குறித்து டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) வலைதளப் பதிவில் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.அந்த பதிவில்,“டொராண்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ வளாகம் அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், இந்தியாவைச் சேர்ந்த முனைவர் பட்ட மாணவர் சிவாங்க் அவஸ்தி உயிரிழந்த செய்தி எங்களை ஆழ்ந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கடினமான நேரத்தில், அவரது துயரமடைந்த குடும்பத்தினருடன் துணைத் தூதரகம் தொடர்ச்சியான தொடர்பில் உள்ளது. மேலும், உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், கனடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, டொராண்டோவில் 30 வயதான இந்திய வம்சாவளி பெண் ஹிமான்ஷி குரானா, அவரது ஆண் நண்பரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள சம்பவம், கனடாவில் இந்தியர்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
English Summary
Gunfire Toronto Indian student Shivang Awasthi dies