கராகஸில் அதிரடி கைது...! - மதுரோ விவகாரத்தில் ஐ.நாவில் உலக அரசியல் வெடிப்பு...!
Dramatic arrests Caracas global political explosion UN over Maduro issue
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் மீது போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் கொகைன் கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்திருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அரசியல் வட்டாரங்களை அதிர வைக்கும் சம்பவம் நிகழ்ந்தது.
அமெரிக்க உளவுத்துறையும் ராணுவப் படையினரும் இணைந்து, வெனிசுலா தலைநகர் கராகஸில் அதிரடித் தாக்குதல் நடத்தி, அதிபர் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.கைதுக்குப் பிறகு இருவரும் போர்க்கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டனர்.

சனிக்கிழமை இரவு புரூக்ளினில் உள்ள போதைப்பொருள் தடுப்பு முகமை சிறையில் மதுரோவும் அவரது மனைவியும் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நடவடிக்கை உலக அரங்கில் பெரும் எதிரொலியை ஏற்படுத்திய நிலையில், வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அவசரக் கூட்டம் நடத்த கொலம்பியா கோரிக்கை வைத்தது. அதன்பேரில், பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.
அக்கூட்டத்தில் சீனா, கொலம்பியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தின. கூட்டத்தின் போது, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ரோஸ்மேரி டிகாப்லோ உரையை வாசித்தார்.
அந்த உரையில்,“முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது. நாடுகளின் இறையாண்மை, அரசியல் சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு ஆகிய அடிப்படைக் கொள்கைகள் மதிக்கப்பட வேண்டும்.
இச்சம்பவம் நாட்டின் நிலைத்தன்மையை மேலும் பாதிக்கக்கூடும்; பிராந்தியத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடும்; மேலும் நாடுகளுக்கிடையேயான உறவுகள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதில் தவறான முன்னுதாரணம் உருவாகக் கூடும்”
என குறிப்பிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ்,“அமெரிக்க நீதித்துறையால் தேடப்பட்டு வந்த இரு குற்றவாளிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துல்லியமான சட்ட அமலாக்க நடவடிக்கை இது. இது வெனிசுலா நாட்டையோ அதன் மக்களையோ எதிர்த்து நடத்தப்பட்ட போர் அல்ல.
நாங்கள் அந்த நாட்டை கைப்பற்றவும் இல்லை”என்று விளக்கமளித்தார்.மதுரோ கைது விவகாரம், அமெரிக்கா–லத்தீன் அமெரிக்க உறவுகள் மற்றும் சர்வதேச சட்ட எல்லைகள் குறித்த புதிய விவாதங்களை உலகளவில் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
English Summary
Dramatic arrests Caracas global political explosion UN over Maduro issue