சவுதியில் ஏவுகணை தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பா...? - உண்மையை வெளிப்படுத்திய இந்திய தூதரகம்...!
Did Indian die missile attack Saudi Arabia Indian Embassy reveals truth
ஈரான்- இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் நடந்த ஏவுகணை தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்ததாக பரவிய செய்திகளை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் தெளிவாக மறுத்துள்ளது.
இந்த தகவல் உண்மையல்ல என்றும், எந்த இந்தியரும் உயிரிழக்கவில்லை என்பது நிம்மதியளிக்கும் விஷயமாகும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.அதே நேரத்தில், இந்த சம்பவத்தில் ஒரு இந்தியர் காயமடைந்துள்ளதாகவும், அவர் தற்போது அல் கார்ஜில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்த நபரின் நிலை குறித்து இந்திய தூதரகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “நேற்று மாலை அல் கார்ஜில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் எந்த இந்தியரும் உயிரிழக்கவில்லை என்பது ஆறுதலாக உள்ளது. சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
மேலும், ஆலோசகர் (CW) ஒய். சபீர் நேற்று இரவு அல் கார்ஜ் சென்று காயமடைந்த இந்தியரை நேரில் சந்தித்து அவரின் நலத்தை விசாரித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குடியிருப்பு பகுதியை தாக்கிய அடையாளம் காணப்படாத ராணுவ ஏவுகணை காரணமாக ஒரு இந்தியரும் ஒரு வங்கதேச நாட்டவரும் உயிரிழந்ததாக சவுதி சிவில் பாதுகாப்பு அமைப்பு தகவல் வெளியிட்டதாக செய்திகள் பரவியிருந்தன. ஆனால், அந்த தகவல் குறித்து தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அல் கார்ஜ் பகுதி பெரிய விமான தளத்தை கொண்ட முக்கிய இடமாகும். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல்களுக்கு பிறகு ஈரான் தெஹ்ரான் வளைகுடா பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதால், கடந்த ஒரு வாரமாக இந்தப் பகுதி பாதுகாப்பு கவனத்திற்கு வந்துள்ளது.
English Summary
Did Indian die missile attack Saudi Arabia Indian Embassy reveals truth