தேர்தல் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவி ஓட்டு...! - திருவாடானையில் அம்பலமான பகீர் உண்மை...!
Vote by throwing dust eyes election officials naked truth exposed Thiruvadana
நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை கைப்பற்றியது. கட்சித் தலைவர் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்து புதிய அரசை வெற்றிகரமாக வழிநடத்த தொடங்கியுள்ளார்.இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் ஏராளமானோர் தமிழ்நாட்டிற்கு வந்து வாக்களித்தது தேர்தல் அதிகாரிகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வாக்களித்து மீண்டும் வெளிநாடுகளுக்கு திரும்பிச் செல்லும் நபர்களை தீவிரமாக கண்காணித்து உரிய ஆய்வு மேற்கொள்ளுமாறு விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு ரகசிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் அடிப்படையில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் வெளிநாடு பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர். குறிப்பாக, பயணிகளின் கை விரல்களில் வாக்குப்பதிவு மை உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விரல்களில் வாக்கு மை இருந்த நபர்களிடம் தனிப்பட்ட விசாரணை நடத்தப்பட்டபோது, பலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும், தமிழகத்தில் பழைய வாக்காளர் அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களித்திருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சட்டவிரோதமாக வாக்களித்ததாக சந்தேகிக்கப்பட்ட நபர்கள் எந்த தொகுதியில் வாக்களித்தார்கள் என்பது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவலர் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், நீதிமன்றத்தின் மூலம் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்திலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த முகமது சுபீர் (65) மற்றும் அவரது மனைவி அஹானா பீவி (56) ஆகியோர் இலங்கை செல்ல விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
அவர்களது கை விரல்களில் வாக்குப்பதிவு மை இருந்ததை தொடர்ந்து, ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டபோது இருவரும் இலங்கை குடியுரிமை பெற்றிருந்தது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் திருவாடானை தொகுதியில் வாக்களித்திருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து, அந்த தம்பதியரை அதிகாரிகள் அவனியாபுரம் காவலர்களிடம் ஒப்படைத்தனர். காவலர்கள் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டதுடன், பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Vote by throwing dust eyes election officials naked truth exposed Thiruvadana