வங்கதேசம்: ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்பு எதிரொலி; வெடித்தது போராட்டம்... 2 பேர் பலி..!
Bangladesh Sheikh Hasina verdict protest
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்ததைக் கண்டித்து நாட்டில் வெடித்த வன்முறைப் போராட்டங்களில் இதுவரை இருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக ஜூலை 1-ஆம் தேதி முதல் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறைகளில் 50 மாவட்டங்களில் சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கில் ஹசீனா, அப்போதைய உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நேற்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் பல நெடுஞ்சாலைகளை மறித்து பேரணிகளை நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்ற காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர். ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது செங்கல் உள்ளிட்ட பொருட்களை வீசி எறிந்தனர்.
ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீடு அமைந்துள்ள தன்மோண்டி பகுதிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள பொதுச் சொத்துகளையும் கடைகளையும் அடித்து உடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடும் பதற்றம் நிலவியது. இந்த வன்முறைகளில் பலர் காயமடைந்த நிலையில், 2 பேர் பலியாகியுள்ளனர்.
English Summary
Bangladesh Sheikh Hasina verdict protest