பாகிஸ்தான் - ஆபிகானிஸ்தான் இடையே போர் நிறுத்தம்!
Afghanistan Pakistan ceasefire Qatar
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர கத்தார் மற்றும் துருக்கி தீவிர மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டன.
முன்னதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 48 மணி நேர போர் நிறுத்தம் முடிந்த சில மணி நேரங்களிலேயே, ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் கிரிக்கெட் வீரர்கள் மூவர் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். இதனால் மீண்டும் பதற்றம் அதிகரிக்க, கத்தார் இரு தரப்பினரையும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
அதனைத் தொடர்ந்து, கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் முல்லா முஹம்மது யாக்கூப் தலைமையிலான குழுவும், பாகிஸ்தான் தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் தலைமையிலான குழுவும் கலந்து கொண்டன.
பேச்சுவார்த்தையின் முடிவில், இரு நாடுகளும் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த போர் நிறுத்தம் நிலைத்து நீடிக்கும்படி வரும் நாட்களில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் எல்லை கடந்த பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கவும், இரு நாடுகளுக்கிடையேயான எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் செலுத்தப்பட்டது,” என தெரிவித்துள்ளது.
English Summary
Afghanistan Pakistan ceasefire Qatar