உகாண்டா: பள்ளியில் கிளர்ச்சியாளர்கள் கொடூர தாக்குதல் - 39 மாணவர்கள் பலி
39 students killed as rebel attack school in uganda
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடந்த 37 வருடங்களாக அதிபராக இருக்கும் யோவேரி முசெவேனியின் ஆட்சியை முஸ்லிம்களால் நிறுவப்பட்ட ஏ.டி.எஃப் கிளர்ச்சியாளர் குழு நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. மேலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியும், கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தியும், அரசு உடைமைகளை அழித்தும் வருகின்றனர்.
இதனால் உகாண்டா ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியார்களுக்கும் அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு உகாண்டா மற்றும் எல்லை பகுதியான மபோண்ட்வேயில் உள்ள லுபிரிஹா மேல்நிலைப் பள்ளியில் ஏ.டி.எஃப் கிளர்ச்சியாளர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்து மாணவர்கள் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறினர்.
இந்த தாக்குதலில் ஒரு காவலர், ஒரு ஆசிரியர் மற்றும் 39 மாணவர்கள் உட்பட 41 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிளர்ச்சியாளர்கள் தங்கும் விடுதியில் உணவு மற்றும் இதர பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக உகாண்டா ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்த அதிபர், பள்ளியின் மீது தாக்குதலில் ஈடுபட்ட குழுவை கண்டறிந்து விரைவில் சுட்டு வீழ்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
39 students killed as rebel attack school in uganda