2025ம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
2025 nobel prize physics
2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. முதலில் மருத்துவத்துறைக்கான பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ. பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் நோயெதிர்ப்பு அமைப்பின் செயற்பாடு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான முக்கியமான கண்டுபிடிப்புக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று வெளியான அறிவிப்பின் படி, இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகளான ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகியோர் 2025ம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
இவர்கள் குவாண்டம் கணினி தொழில்நுட்பத்தில் முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக, குவாண்டம் கணினிக்கான சிப் உருவாக்கத்தில் இவர்களின் கண்டுபிடிப்பு விஞ்ஞான உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கியதாகக் கருதப்படுகிறது.
இந்த மூவரின் கண்டுபிடிப்பு, எதிர்கால கணினி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கும் என நோபல் குழு தெரிவித்துள்ளது.