மசூதிக்கு முன் பன்றி தலை: பிரான்சில் மத கலவரத்தை தூண்டும் சதி திட்டம்: 11 பேர் அதிரடி கைது..!
11 people arrested in France over plot to incite religious riots
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. குறிப்பாக, அதிக இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வும், யூதர்களுக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த 11 பேரை பிரெஞ்சு மற்றும் செர்பிய பாதுகாப்புப் படையினர் இணைந்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இவர்கள் செர்பியாவின் பெல்கிரேட் மற்றும் வெலிகா பிளானா ஆகிய நகரங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, பாரிஸ் நகரில் உள்ள ஒன்பது மசூதிகளுக்கு வெளியே பன்றித் தலைகளை வைத்தது, யூத இனப்படுகொலை அருங்காட்சியகம், யூத தொழுகைக்கூடங்கள் மற்றும் யூத உணவகம் ஆகியவற்றின் மீது பச்சை வண்ணத்தை வீசியமை போன்றவையும், யூதர்களுக்கு எதிராக இனப்படுகொலையைத் தூண்டும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டியது போன்ற குற்றங்களை இந்தக் கும்பல் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து செர்பிய உள்துறை அமைச்சகம் கருது தெரிவிக்கையில், 'வேறுபாடுகளின் அடிப்படையில் வெறுப்பு, பாகுபாடு மற்றும் வன்முறையைத் தூண்டும் சித்தாந்தங்களைப் பரப்புவதே இந்தக் குழுவின் நோக்கமாக இருந்துள்ளது' என்று தெரிவித்துள்ளது. அதன்படி கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது இனப் பாகுபாடு மற்றும் உளவு பார்த்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
11 people arrested in France over plot to incite religious riots