விஜய் பேச்சில் இவ்வளவு உள்நோக்கமா..? கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்..! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழக தலைவர் கரூர் சம்பவம் குறித்து இன்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவில் தனது கட்சி தொண்டர்களை தூண்டி விடும் விதமாகவே விஜயின் உரை அமைந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'தமிழக வெற்றிக் கழகம் 27ம் தேதி கரூரில் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இதுவரை 41 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோய் உள்ளன. பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்ற நொடியில் இருந்தே தன்னார்வத்துடன் பொதுமக்களும், மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு மக்களின் மதிப்புமிக்க உயிர்களைப் பாதுகாத்துள்ளது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் 27ந் தேதி இரவு முதலே நேரில் கரூர் சென்று இப்பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்கள். உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத் தொகையும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நேரில் கரூர் சென்று தங்களது ஒருமைப்பாட்டையும். ஆறுதலையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தெரிவித்து வருகிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை துவங்கி உள்ளது. காவல்துறை மட்டத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் உட்பட பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இதன் மூலம் மேலும் விபரங்கள் தெரிய வர வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இந்த கொடும் சம்பவம் நடைபெற்று மூன்று தினங்களுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது கட்சி நடத்தி நடத்திய நிகழ்வில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகளுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மாநில அரசும், அரசியல் கட்சிகளும், மக்களும் செய்திட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதே சரியானதாக இருக்க முடியும். தான் மிக மிக தாமதமாக வந்தது குறித்தோ, பரப்புரையின் போது நெரிசலில் மக்கள் சிக்கிக் கொண்டிருந்த நேரத்தில் தனது தொண்டர்களை கட்டுப்படுத்த முயற்சிக்காதது. அவர் உடனடியாக கரூரை விட்டு வெளியேறியதற்கான உரிய காரணங்களைப் பற்றியோ காணொளியில் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை.

இதற்கு மாறாக அவரது உரை என்பது முழுமையான அரசியல் உன்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. உயிர் இழப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு மாறாக, அரசு நிர்வாகத்தின் மீது பழி சுமத்துவதாகவே இருக்கிறது. 41 பேர் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கூட தன்னையும், தன் கட்சி தொண்டர்களையும் பழிவாங்குவதற்கான மாநில அரசின் சதி என்கிறார். தனது கட்சி தொண்டர்களை தூண்டி விடும் விதமாகவே அவரது உரை அமைந்துள்ளது.

இது போன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொறுப்பற்ற கருத்தை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். மதிப்புமிக்க மனித உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் தலைமைப் பண்பையும், மனித மாண்பையும் வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் விஜய் வெளியிட்டுள்ள காணொளி எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இத்தகைய உள்நோக்கங்கள் விஜய் அவர்களின் அரசியல் பயணம் குறித்து தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Communist Party condemns Vijay speech as ulterior motive


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->