சேலத்தில் 100 டிகிரியை நெருங்கிய கொளுத்தும் வெயில்...! - குளிர்பான கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
scorching heat Salem approaching 100 degrees Crowds people flock cold drink shops
கோடை காலம் ஆரம்பித்ததுடன் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருகிற நாட்களில் வெப்பம் மேலும் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது.
அந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று வெயிலின் உஷ்ணம் கணிசமாக உயர்ந்தது.இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை சேலம் மாவட்டத்தில் நேற்று 99.7 டிகிரியாக பதிவாகியுள்ளது. இதனால் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது.

குறிப்பாக மாலை 5 மணி வரை வெப்பம் குறையாமல் நீடித்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க பலர் மதிய நேரங்களில் வீடுகளுக்குள் தங்கியிருந்தனர்.அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றவர்கள் குடைகளைத் தாங்கியும், முகத்தை துணியால் மூடியும் சாலைகளில் பயணித்தனர்.
வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பலர் வழியிலேயே நிழலான இடங்களைத் தேடி ஒதுங்கும் நிலையும் காணப்பட்டது. இனி வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற தகவல் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வெயிலின் உஷ்ணத்திலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் இளநீர், தர்பூசணி, மோர், கம்மங்கூழ், நுங்கு போன்ற இயற்கை குளிர்பானங்களையும், பல்வேறு செயற்கை குளிர்பானங்களையும் அதிக அளவில் வாங்கி அருந்தினர்.
இதனால் குளிர்பானக் கடைகளில் கூட்டம் அதிகரித்தது. தற்போது சந்தையில் தர்பூசணி ஒரு கிலோ ரூ.25 வரை விற்பனையாகவும், இளநீர் ரூ.30 முதல் ரூ.70 வரை விலையில் கிடைக்கவும் தொடங்கியுள்ளது.
English Summary
scorching heat Salem approaching 100 degrees Crowds people flock cold drink shops