தயங்கும் அமைச்சர்கள்! கல்லாக் கட்டத் தொடங்கிய பிஏக்கள்! அமைச்சர்களின் பிஏக்கள் மீது வசூல் குற்றச்சாட்டு? தலைமைச் செயலகத்தில் பரபரப்பு தகவல்
Ministers Hesitate PAs Start Raking in the Cash Allegations of Extortion Against Ministers PAs Stir at the Secretariat
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில், அமைச்சர்களின் தனிச்செயலாளர்கள் (பிஏக்கள்) தொடர்பாக தலைமைச் செயலக வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சில அமைச்சர்களின் பிஏக்கள் துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் முறைகேடான வசூலில் ஈடுபடுவதாக கூறப்படும் தகவல்கள் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன.
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஊழலற்ற மற்றும் லஞ்சமற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என்று முதல்வர் விஜய் பலமுறை உறுதியளித்திருந்தார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும், "மக்கள் பணத்தை தொட மாட்டோம்; தொடவும் விடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலைப்பாடு மக்களிடையே வரவேற்பையும் ஏற்படுத்தியது.
தற்போதைய அமைச்சரவையில் மூத்த அமைச்சர் செங்கோட்டையனைத் தவிர பெரும்பாலானோர் முதல் முறையாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். எளிய பின்னணியில் இருந்து வந்த இவர்கள் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடமும் அரசியல் வட்டாரங்களிலும் நிலவியது.
இந்த நிலையில், சில அமைச்சர்களின் பிஏக்கள் நிர்வாக முடிவுகளில் தலையிட்டு, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் முறைகேடாக பணம் வசூலிக்க முயற்சிப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, எதிர்கால அரசியல் சூழல் மற்றும் தேர்தல் செலவுகளை காரணம் காட்டி, சிலர் அமைச்சர்களையே தவறான முடிவுகளுக்கு தூண்டுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிகளவில் தேர்தல் செலவுகள் ஏற்படும் என்பதால், அதற்கான நிதியை தற்போதே திரட்ட வேண்டும் என்ற ஆலோசனைகளை சில பிஏக்கள் வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பணியிட மாற்றங்கள், பதவி உயர்வுகள், அரசு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதேநேரத்தில், இந்த விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சமும் சிலரிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், எந்த வகையில் செயல்பட்டால் சிக்கல் ஏற்படாது என்பதற்கான ஆலோசனைகளும் நடைபெறுவதாக தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அமைச்சர்களின் அலுவலகங்களில் நடைபெறும் செயல்பாடுகளை கண்காணிக்க தமிழக வெற்றிக் கழக தலைமை தனிப்பட்ட கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், சில மூத்த அமைச்சர்கள் இதற்கென தனி குழுவை செயல்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் முழுமையாக மறுத்துள்ளனர். அமைச்சர்களின் பிஏக்கள் மீது கூறப்படும் வசூல் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும், அதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகாத நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்து உண்மை நிலை என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Ministers Hesitate PAs Start Raking in the Cash Allegations of Extortion Against Ministers PAs Stir at the Secretariat