"59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நேர்மையான ஆட்சி வந்துள்ளது" !இனி நம் பாதை இதுதான்! மாணிக்கம் தாகூர் அதிரடி!
After 59 years an honest administration has come to power in Tamil Nadu This is our path forward Manickam Tagore bold statement
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உருவான புதிய அரசியல் சூழலில், காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து ஆட்சியில் பங்கேற்று வருகிறது. இந்த நிலையில், தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.
சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் உரையாற்றிய மாணிக்கம் தாகூர், கடந்த கால தேர்தல் தோல்விகளுக்கான காரணம் குறித்து பேசினார். "நம்முடைய பலத்தை நாமே சரியாக புரிந்துகொள்ளாததால்தான் அரசியலில் பல முறை தோல்வியை சந்தித்தோம். நமக்குள்ள அரசியல் வலிமையை உணராமல், கூட்டணி கட்சிகளின் முடிவுகளையே நம்பி செயல்பட்டோம். ஆனால் இப்போது அரசியல் சூழல் மாறியுள்ளது" என்றார்.
தற்போதைய ஆட்சி அமைப்பில் காங்கிரஸின் ஆதரவு முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்ட அவர், "சட்டமன்றத்தில் எங்களுடைய ஐந்து உறுப்பினர்களின் ஆதரவு ஆட்சி அமைப்பதில் முக்கியமானதாக இருந்தது. அதனால் காங்கிரஸ் இந்த கூட்டணி அரசில் பங்கெடுத்துள்ளது. தற்போது எங்கள் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாத் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர்" என்றார்.
மேலும், அமைச்சர்கள் வாரத்திற்கு ஒரு நாளாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு இருவரும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கட்சித் தொண்டர்களின் கோரிக்கைகள் குறித்து பேசிய அவர், "கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பொதுமக்களின் தேவைகளுக்காக நமது அமைச்சர்களை அணுக வேண்டும். நாம் ஆட்சியில் பங்கேற்றிருப்பதை மறந்துவிடக் கூடாது. இது கூட்டணி ஆட்சி என்பதால், கூட்டணி கட்சிகளுடன் பரஸ்பர மரியாதையுடனும் நட்புடனும் செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
முதல்வர் விஜயின் தலைமையைப் பாராட்டிய மாணிக்கம் தாகூர், "தவெக என்பது இளைஞர்களின் கட்சி. முதலமைச்சர் விஜய் நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சிக்குப் பிறகு இப்போது தான் மீண்டும் நேர்மையான நிர்வாகம் உருவாகியுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். 59 ஆண்டுகளுக்குப் பிறகு லஞ்சமில்லாத, சுத்தமான ஆட்சி அமைந்துள்ளது என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது" என்றார்.
மேலும், "காமராஜரின் பிறந்த நாளை 'லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்' என்ற கருத்துடன் கொண்டாடுகிறோம். காங்கிரஸ் என்பது நல்லவர்கள், நேர்மையானவர்கள் உருவாக்கிய இயக்கம். அந்த நேர்மையை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். இனி காங்கிரஸ் புதிய எழுச்சியுடன் செயல்பட்டு, 'காங்கிரஸ் 2.0' என்ற புதிய கட்டத்தை நோக்கி முன்னேறும்" என்றும் அவர் தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூரின் இந்தப் பேச்சு, தமிழகத்தில் உருவாகியுள்ள புதிய கூட்டணி அரசியல் மற்றும் காங்கிரஸின் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
After 59 years an honest administration has come to power in Tamil Nadu This is our path forward Manickam Tagore bold statement