அரபிக்கடலை நோக்கி நகரும் காற்றழுத்தம்: தென் தமிழகத்தில் மிக கனமழை வாய்ப்பு - பிரதீப் ஜான் கணிப்பு!
rain Alert Tamilnadu
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலை நோக்கி நகரும் என்பதால், தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் டெல்டா பகுதிகளில் மழை நிலவரம்
சென்னையில் இன்று (நவ. 18) சூரிய ஒளி காணப்பட்டாலும், மழை மேகங்கள் சென்னையைச் சுற்றியிருப்பதால், நகரில் 20 மி.மீ. முதல் 40 மி.மீ. வரை மழைக்கு வாய்ப்புள்ளது.
நேற்று இரவு டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது.
இன்றிரவு முதல் இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென் தமிழகத்தை நோக்கி நகருகிறது.
தென் தமிழகத்தில் கவனம்
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகரும்போது, ஈரப்பதம் உள் மாவட்டங்களுக்குள் தள்ளப்பட்டு மழைக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக, தென் தமிழக மாவட்டங்களான:
தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, மாஞ்சோலை வனப் பகுதி மிக அதிக கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
இந்தக் குமரிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலை நோக்கி நகர்ந்தவுடன், ஐந்து நாட்களுக்குப் பிறகு, தென்மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.