தென்மேற்கு பருவமழை; தமிழகத்தில் மே 18 வரை மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்..?
Places in Tamil Nadu Likely to Receive Rain Until May 18
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நாளை முதல் வரும் மே 18-ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
தென்மேற்கு பருவமழை, தெற்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இந்த வார இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், வடக்கு இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது என்று கூறியுள்ளது.
அத்துடன், இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக் கூடும் எனவும், இதன் காரணமாக,
நாளை (மே 13) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்திலும், 14-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்திலும், 15-ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும் வரும் மே 16-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்திலும், 17-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 18-ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து, தமிழகத்தில் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறியுள்ளது.
அதேப்போன்று, நாளை முதல் 15-ஆம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று காலை 08.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம ஆழியாரில் 05 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், கோவை மாவட்டம் பெள்ளாசியில் தலா 04 செமீ, கோவை மாவட்டம் உபாசி, ஒத்தக்கால் மண்டபம், கோட்டூரில தலா 02 செமீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
English Summary
Places in Tamil Nadu Likely to Receive Rain Until May 18