சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குட் நியூஸ்...! சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நீடித்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"தெற்கு தெலுங்கானா முதல் மன்னார் வளைகுடா வரையிலான பகுதிகளில், ராயலசீமா மற்றும் தமிழகத்தின் வழியாக சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.மேலும், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டலச் சுழற்சியும் நிலவி வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கான சூழல் உருவாகியுள்ளது.இன்று (8-ந்தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதே நேரத்தில், அந்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (9-ந்தேதி) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசுவதோடு, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.வருகிற 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. இருப்பினும், சில பகுதிகளில் வெப்பநிலை சற்று உயரக்கூடும்.

கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.இந்த காலகட்டத்தில் உள் தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news amidst scorching sun Chance rain with thunder and lightning in 4 districts including Chennai


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->