பருவமழை எச்சரிக்கை...! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் அதிரடி ஆலோசனை...!
Monsoon warning Chief Minister Vijay holds emergency meeting officials
வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கி வரும் நிலையில், மழை மற்றும் புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே தடுக்கும் வகையில் தமிழக அரசு தீவிர முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதல்-அமைச்சர் விஜய் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் நிலவுகிறது. தமிழகத்திற்கு அதிக அளவில் மழைப்பொழிவை வழங்கும் இந்த காலகட்டத்தில், கனமழை மட்டுமின்றி புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடர்ப்பாடுகளாலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, மழைக்கால பாதிப்புகளை குறைப்பதற்காக அரசு சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களின் அதிகாரிகளுடன் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகள், வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள், நீர்நிலைகளின் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சமாளிக்கும் வகையில் துறைவாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட மற்றும் அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Monsoon warning Chief Minister Vijay holds emergency meeting officials