ஆக்சிஜன் சிலிண்டரே சுமையாக இல்லை… மனைவியின் ஆசைதான் முக்கியம்...!- வைரலான காதல் காட்சி
oxygen cylinder wasnt burden my wife wish what mattered love scene that went viral
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தின் ராய்பாக் தாலுகாவில் உள்ள சிஞ்சோலி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற மாயக்கா தேவி கோவில் திருவிழா இந்நாட்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இந்த திருவிழாவுக்கு மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முதிய தம்பதி தவறாமல் வந்து அம்மனை தரிசிப்பது வழக்கம்.
கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்த இந்த பக்திப் பயணத்திற்கு, இந்த ஆண்டு ஒரு பெரிய சவால் எழுந்தது. மனைவிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, கடுமையான சுவாசக்கோளாறால் அவதிப்பட்டு வந்ததால், ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் மட்டுமே சுவாசிக்க முடியும் நிலை ஏற்பட்டது.

“இந்த வருடம் அம்மனை பார்க்க முடியாதோ?” என்ற அவளின் கவலை கணவரின் மனதை உலுக்கியது. மருத்துவர்களின் ஆலோசனையை பெற்ற அவர், ஆக்சிஜன் சிலிண்டருடன் மனைவியை பாதுகாப்பாக அழைத்து சென்று தரிசனம் செய்ய முடிவு செய்தார்.
நீண்ட பயணத்தை கடந்து கோவிலுக்கு வந்த அவர், மனைவி எங்கு சென்றாலும் ஆக்சிஜன் சிலிண்டரைத் தோளில் சுமந்து கொண்டு துணையாக நடந்தார். அந்த காட்சி கோவிலில் இருந்த பக்தர்களின் கண்களை கலங்கச் செய்தது.
அன்பும் அர்ப்பணிப்பும் கலந்த அந்த தருணத்தை சிலர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி, “முதுமையிலும் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் உண்மையான காதல் இதுதான்” என்று பலரும் அந்த கணவரை பாராட்டி வருகிறார்கள்.
பக்தியும் பாசமும் இணைந்த இந்த சம்பவம், மனிதநேயத்தின் அழகை மீண்டும் நினைவூட்டுகிறது.
English Summary
oxygen cylinder wasnt burden my wife wish what mattered love scene that went viral