ஆன்லைன் ஷாப்பிங்கில் புரட்சி...! ரூ.2,800 கோடி முதலீட்டில் 'மின்னல் வேக' டெலிவரி...! - அமேசானின் மெகா பிளான்...!
Revolution online shopping Lightning speed delivery investment 2800 crore Amazons mega plan
இணைய வணிக உலகில் வேகத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக, அமேசான் நிறுவனம் ‘Amazon Now’ எனும் அதிவேக விநியோக சேவையை இந்தியா முழுவதும் 100 நகரங்களுக்கு விரிவுபடுத்தும் அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கத்தை வலுப்படுத்த, 1000-க்கும் மேற்பட்ட சிறிய விநியோக மையங்களின் ஆதரவுடன் சுமார் ரூ.2,800 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் சில நிமிடங்களில் பொருட்களை வாடிக்கையாளர்களின் கதவுக்குக் கொண்டு சேர்க்கும் ‘க்விக் காமர்ஸ்’ போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், அமேசானின் இந்த புதிய முயற்சி சந்தையில் வேகமான மாற்றத்தை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மும்பை, தில்லி, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் இந்த சேவை, விரைவில் கொச்சி, அமிர்தசரஸ், மங்களூர், விசாகப்பட்டினம், லக்னௌ, புனே, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட மெட்ரோ மற்றும் வளர்ந்து வரும் நகரங்களுக்கும் பரவவுள்ளது.
‘Amazon Now’ சேவையின் மூலம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், அழகு சாதனங்கள், சிறிய மின்னணு உபகரணங்கள், குழந்தைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கான பொருட்கள் என 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் மிகக் குறுகிய நேரத்திலேயே வீடு தேடி சேர்க்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விரிவாக்கம் 1000-க்கும் மேற்பட்ட சிறு விநியோக மையங்களின் துணையுடன் நடைபெறும் என்பதுடன், 16,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக நுகர்வோரிடம் விற்பனை செய்யும் வாய்ப்பும் உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், சில நிமிடங்களில் விநியோகம், அன்றைய தினமே கிடைக்கும் சேவை, ஒரே நாளில் டெலிவரி போன்ற பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக ‘Amazon Now’ சேவையை பயன்படுத்தும் பிரைம் உறுப்பினர்கள், முன்பைவிட மூன்று மடங்கு அதிகமாக பொருட்களை ஆர்டர் செய்து விரைவாகப் பெறுகின்றனர் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Revolution online shopping Lightning speed delivery investment 2800 crore Amazons mega plan