பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் 'எல் நினோ'; ஆரம்பச் சுவடுகளைக் கண்டறிந்த இந்தியாவின் EOS-06 (ஓசன்சாட்-3) செயற்கைக்கோள்..!
ISRO satellite detects early signs of the intensifying El Nino in the Pacific Ocean
பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் 'எல் நினோ' (El Niño) நிகழ்வின் மிகத் தெளிவான ஆரம்பச் சுவடுகளைக், பூமிக்கு மேலே 741 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் EOS-06 (ஓசன்சாட்-3) செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது.
உலக வானிலை அமைப்பின் (WMO) கணிப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தத் தரவுகள், இந்த ஆண்டின் சக்திவாய்ந்த காலநிலை மாற்றங்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கையை வழங்குகின்றன.
அதன்படி, விஞ்ஞானிகள் கண்காணிக்கும் முக்கியச் சமிக்ஞையாக, கடலின் உணவுச் சங்கிலிக்கு அடிப்படையான 'பைட்டோபிளாங்க்டன்' நுண்ணிய தாவரங்களில் காணப்படும் குளோரோபில்-ஏ நிறமியின் கூர்மையான சரிவு பதிவாகியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள தேசிய தொலைதூர உணர்திறன் மையத்தின் (NRSC) பகுப்பாய்வின்படி, தற்போது வெப்பமண்டல பசிபிக் பகுதியில் மேற்பரப்பு குளோரோபில் அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதுடன், கடல் மேற்பரப்புக் காற்றும் கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசைக்கு மாறியுள்ளது.
பாரம்பரியமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை அளவீடுகளை விட, குளோரோபில் மற்றும் காற்று திசைமாறுதலில் ஏற்படும் மாற்றங்கள் எல் நினோவின் தொடக்கத்தை உடனடியாக வெளிப்படுத்தும் திறன்கொண்டவை.

அதாவது, ISRO செயற்கைக்கோளிலுள்ள 'ஓசன் கலர் மானிட்டர்' மற்றும் 'ஸ்கேட்டோமீட்டர்' ஆகிய இரு கருவிகளும் இணைந்து, கடல் இயக்கவியலில் நிகழும் இந்த மாறுதல்களைத் துல்லியமாகக் கண்காணித்து வருகின்றன.
அந்தவகையில், இந்த எல் நினோ நிகழ்வு மேலும் தீவிரமடைந்தால், அது உலகளாவிய வானிலை முறைகளை மாற்றுவதுடன், இந்தியாவின் தென்மேற்கு பருவமழையையும் பாதிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் வலுவான எல் நினோக்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்நிகழ்வு குறித்த இந்திய செயற்கைக்கோளின் இந்தத் தரவுகள், சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
English Summary
ISRO satellite detects early signs of the intensifying El Nino in the Pacific Ocean