96 சதவீதம் மறையும் நிலவு...! இன்று இரவு நிகழும் பிரமிக்க வைக்கும் சந்திர கிரகணம்...!
96 percent moon hidden stunning lunar eclipse occur tonight
இந்த ஆண்டின் முக்கிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றான பகுதி சந்திர கிரகணம் இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ளது. பூமி, சூரியன், சந்திரன் ஆகியவை ஒன்றுக்கொன்று குறிப்பிட்ட நிலையில் அமையும் போது, சந்திரன் பூமியின் நிழல் பகுதிக்குள் கடந்து செல்வதால் இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது.
கிரகணத்தின் போது பூமியின் அடர்ந்த நிழல் சந்திரனின் பெரும்பகுதியை மறைக்கும். இதனால் வழக்கமான வெண்மை நிறத்தில் தெரியும் நிலவு, படிப்படியாக ஒளியை இழந்து தாமிரம் கலந்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இரவு வானில் தோன்றும் இந்த வித்தியாசமான காட்சி, வானியல் ஆர்வலர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமையும்.

சர்வதேச நேரக் கணக்கீட்டின்படி, நாளை அதிகாலை 2.33 மணியளவில் சந்திரன் பூமியின் முதன்மை நிழல் பகுதிக்குள் நுழையத் தொடங்கும். இதைத்தொடர்ந்து கிரகணத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும்.அதிகாலை 4.12 மணியளவில் சந்திர கிரகணம் உச்சநிலையை அடையும். அப்போது சந்திரனின் சுமார் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மறைக்கப்படும். ஒரு சிறிய பகுதி மட்டுமே சூரிய ஒளியைப் பெறும் என்பதால், அந்த நேரத்தில் நிலவின் தோற்றம் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
இந்த அரிய தருணத்தை விண்வெளி ஆர்வலர்கள் மட்டுமின்றி, வானியல் நிகழ்வுகளை ரசிப்பவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சந்திர கிரகணத்தை தெளிவாகக் காண முடியும்.அமெரிக்க கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், ஹவாய் மற்றும் அலாஸ்காவின் சில பகுதிகளைத் தவிர, கிரகணத்தைப் பார்க்கும் வாய்ப்பு உள்ளது.
ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலும் இந்த வானியல் நிகழ்வு காட்சியளிக்கும்.இந்த சந்திர கிரகணம் நடைபெறும் நேரத்தில் இந்தியாவில் பகல் பொழுதாக இருக்கும் என்பதால், தமிழகத்தைச் சேர்த்து இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் இதனை நேரடியாகக் காண முடியாது.சூரிய கிரகணத்தைப் பார்ப்பது போன்று சந்திர கிரகணத்தை ரசிக்க சிறப்பு பாதுகாப்புக் கண்ணாடிகள் தேவையில்லை.
சந்திரனை வெறும் கண்களாலேயே பாதுகாப்பாகப் பார்க்க முடியும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.தொலைநோக்கி அல்லது இருகண் நோக்கி போன்ற கருவிகளைப் பயன்படுத்தினால், நிலவின் மேற்பரப்பில் ஏற்படும் ஒளி மாற்றங்களையும் தாமிர நிறத் தோற்றத்தையும் இன்னும் தெளிவாக ரசிக்க முடியும்.
English Summary
96 percent moon hidden stunning lunar eclipse occur tonight