ஷங்கரை நேரில் பார்த்தும் கண்களை பார்க்காத அர்ஜுன் தாஸ்.. அதிதி ஷங்கர் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
Arjun Das met Shankar in person but didnot look him in the eye Aditi Shankar shares an interesting anecdote
இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்ற அடையாளத்தை முதன்முதலில் உருவாக்கியவர்களில் முக்கியமானவர் இயக்குநர் ஷங்கர். ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘ஜீன்ஸ்’, ‘முதல்வன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ என தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்ததுடன், தனது படங்களில் பிரமாண்டமான காட்சிகளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்தார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஷங்கரின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ‘ஐ’ படத்தைத் தொடர்ந்து ‘2.0’, ‘இந்தியன் 2’, ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களையும் தோல்வியையும் சந்தித்தன. இதையடுத்து அடுத்ததாக ‘வேள்பாரி’ படத்தை பிரமாண்டமாக இயக்க ஷங்கர் திட்டமிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார். ‘விருமன்’, ‘மாவீரன்’, ‘நேசிப்பாயா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், அடுத்ததாக அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் அர்ஜுன் தாஸும், அதிதி ஷங்கரும் கலந்துகொண்டனர். அப்போது ஷங்கரைப் பற்றிய சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை அதிதி பகிர்ந்துகொண்டார்.“அர்ஜுன் தாஸ் என் அப்பாவின் கண்களைப் பார்த்தே பேசவில்லை” என்று அதிதி கூறினார்.
இதற்கு விளக்கமளித்த அர்ஜுன் தாஸ், ஷங்கர் சார் படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருந்தபோது அவரிடம் பேச வேண்டும் என்று அதிதி கூறியதாக தெரிவித்தார். ஆனால் ஷங்கரிடம் என்ன பேசுவது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
அப்போது அருகில் இருந்த அதிதி, “உங்கள் ஷூட்டிங் எப்படி போகிறது?” என்று ஷங்கரிடம் சென்று கேட்கும்படி கூறியிருக்கிறார். அதன்படி ஷங்கரிடம் சென்று அந்தக் கேள்வியைக் கேட்டதாக அர்ஜுன் தாஸ் நகைச்சுவையாக தெரிவித்தார்.
மேலும், “அதிதிக்கு அவர் அப்பா என்பதால் மிகவும் கேஷுவலாக பேசுகிறார். அவருடைய மகனும் அவருடன் ஜாலியாகத்தான் பேசினார். ஆனால் எனக்கு அவரிடம் எப்படி பேசுவது என்றே தெரியவில்லை” என்று அர்ஜுன் தாஸ் கூறியுள்ளார்.
அதிதி ஷங்கரின் இந்தப் பேட்டியும், அர்ஜுன் தாஸ் ஷங்கரிடம் பேசத் தயங்கிய விதம் குறித்த அவரது விளக்கமும் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
English Summary
Arjun Das met Shankar in person but didnot look him in the eye Aditi Shankar shares an interesting anecdote