திமுகவில் 110 மாவட்டங்கள்! அமைப்பு ரீதியான மாற்றத்திற்கு தயாராகும் திமுக! ஸ்டாலினிடம் தங்கம் தென்னரசு கொடுத்த ரிப்போர்ட்! - Seithipunal
Seithipunal


திமுகவின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 77-ல் இருந்து 110 ஆக உயர்த்தப்பட உள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகளை இணைத்து புதிய மாவட்டங்களை உருவாக்கலாம் என்பது குறித்த பரிந்துரை அறிக்கை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக செயற்குழு கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சராசரியாக இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற வகையில் கட்சியின் அமைப்பு மாற்றியமைக்கப்பட உள்ளது.

மேலும், மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பதுடன், ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே அந்தப் பதவியில் தொடர முடியும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களுக்கு திமுகவின் அடுத்த தலைமுறை நிர்வாகிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில், நீண்ட காலமாக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் மூத்த நிர்வாகிகளை முற்றிலும் ஓரங்கட்டாமல், அவர்களுக்கு மாநில அளவிலான முக்கிய பொறுப்புகளை வழங்கவும் கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய மாவட்டப் பிரிப்பின் காரணமாக சுமார் 13 முன்னாள் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர் பதவியை இழக்கக்கூடும் என்றும், அதேவேளையில் சுமார் 50 புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், 110 மாவட்டங்களை எவ்வாறு பிரிப்பது என்பது குறித்து கட்சியின் மறுசீரமைப்பு பரிந்துரைக் குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளது. இந்த அறிக்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெறக்கூடிய சட்டப்பேரவைத் தொகுதிகள் குறித்த பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

பெரும்பாலான மாவட்டங்கள் தலா இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டு அமைக்கப்பட உள்ள நிலையில், சென்னை, திருச்சி, சேலம், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தலா மூன்று தொகுதிகளைக் கொண்டு அமைப்பு ரீதியான புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதேபோல் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தலா மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் புதிய அமைப்பு மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுசீரமைப்பு குழுவின் பரிந்துரைகளை ஸ்டாலின் பரிசீலித்துள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த அமைப்பு மாவட்டங்களில் இடம்பெறும் என்பது குறித்த இறுதி அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே திமுகவில் கட்சிப் பதவிகளுக்கு தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, 110 அமைப்பு மாவட்டங்களின் பிரிப்பு அறிவிக்கப்பட்டவுடன், அடுத்தகட்டமாக மாவட்டச் செயலாளர்கள் தேர்வு மற்றும் கிளை நிர்வாகிகள் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

110 Districts in the DMK The party gears up for organizational restructuring Thangam Thennarasu submits a report to Stalin


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->