ஒருதலைக்காதல் விவகாரம்... இன்ஸ்டாவில் மெசேஜ் அனுப்பி விட்டு இளைஞர் விபரீத முடிவு..! கோவையில் பரிதாபம்...!
Youth committed suicide by hanging himself due to one side love in kovai
கோவை மாவட்டத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாவில் மெசேஜ் அனுப்பி விட்டு இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சமத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஓட்டுநர் விக்னேஷ் (22). இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான கோகுலகிருஷ்ணன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கிரிக்கெட் பார்ப்பதற்காக வீட்டிற்கு அழைத்துள்ளார். இதையடுத்து கோகுலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் சிறுவனும், விக்னேஷும் படுத்து தூங்கியுள்ளனர்.
இந்நிலையில் காலையில் விக்னேஷின் தாய் வந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள அறையில் விக்னேஷ் தூக்கில் தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷின் தாயார் சிறுவனை எழுப்பி விக்னேஷின் உடலை கைப்பற்றினார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்ததில் விக்னேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் விக்னேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சிறுவனிடம் விசாரித்து, அவரது செல்போனை சோதனை செய்ததில், இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குறுஞ்செய்தியில், என்னுடைய சாவுக்கு நீ தான் காரணம். என்னுடைய அம்மாவை தனியா விட்டுட்டு போக வச்சுட்டல்ல, என்னுடைய சாபம், என் அம்மா சாபம் உன்ன சும்மா விடாது என்று அனுப்பப்பட்டிருந்தது.
மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த ஐந்து ஆண்டுகளாக விக்னேஷ் உறவுக்கார பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் காதலை ஏற்க மறுத்ததால் விக்னேஷ் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Youth committed suicide by hanging himself due to one side love in kovai