'அம்மன் நகையை திருடுனது நீதானே'...? - சாமியாடி 10 சவரன் நகையைக் கண்டுபிடித்த பூசாரி மனைவி... ஊரே அதிர்ச்சி...! - Seithipunal
Seithipunal


திருத்தணி அருகே உள்ள பழமையான திரவுபதி அம்மன் கோவிலில் மாயமானதாகக் கருதப்பட்ட 10 சவரன் தங்கச் சங்கிலி, தீமிதி திருவிழாவின் போது எதிர்பாராத வகையில் மீண்டும் கிடைத்த சம்பவம் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியதுடன், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகாவிற்குட்பட்ட அய்யனேரி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழா, இந்த ஆண்டும் பக்தி பரவசத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பக்தர்கள் நேரடியாக கருவறைக்குள் சென்று தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து வழிபாடு நடத்தினர்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் வழக்கமான பூஜை ஏற்பாடுகளுக்காக கோவிலுக்குச் சென்ற நிர்வாகத்தினர், அம்மன் சிலையில் அலங்கரிக்கப்பட்டிருந்த சுமார் 10 சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலி காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கோவில் வளாகம் முழுவதும் தீவிரமாக தேடியும் நகை கிடைக்காததால், பக்தர் போல் வந்த மர்மநபர் ஒருவர் சங்கிலியை எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து சம்பவம் குறித்து உடனடியாக காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள், கோவில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு, சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கினர். இருப்பினும், மாயமான தங்கச் சங்கிலி குறித்து எந்தத் துப்பும் கிடைக்காததால் பரபரப்பு நீடித்தது.இந்த பரபரப்பான சூழலிலேயே நேற்று மாலை தீமிதி திருவிழா வழக்கம்போல் கோலாகலமாக நடைபெற்றது.

திருவிழாவைக் காணவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர்.அப்போது, கோவில் பூசாரியின் மனைவி மகேஸ்வரிக்கு திடீரென அருள்வந்ததாக பக்தர்கள் நம்பிய நிலையில், அவர் சாமியாடி அருள்வாக்கு வழங்கத் தொடங்கினார்.சாமியாடியபடி, "என்னுடைய நகை எங்கும் போகவில்லை... இதே இடத்தில்தான் இருக்கிறது..." என்று கூறிக்கொண்டே கோவில் முழுவதும் சுற்றி வந்தார்.

பின்னர் நேராக கருவறைக்குள் சென்று சில நிமிடங்களில் வெளியே வந்த அவர், தனது கையில் மாயமானதாகக் கருதப்பட்ட அம்மனின் தங்கச் சங்கிலியை வைத்திருந்தார்.அதை பக்தர்களிடம் உயர்த்திக் காட்டியபடி, "என் நகை இங்குதான் இருந்தது..." என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டது. இதைக் கண்ட பக்தர்கள் பக்திப் பரவசத்தில் கைகளை உயர்த்தி அம்மனை வழிபட்டனர். சில நிமிடங்களில் கோவில் வளாகம் முழுவதும் இந்தச் சம்பவம் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அம்மனின் தங்கச் சங்கிலி மீண்டும் கிடைத்ததால் பக்தர்களும், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். அம்மனின் நகையை எடுத்துச் சென்றவர்கள் தெய்வத்தின் மீதான அச்சம் காரணமாகவோ அல்லது மனமாற்றத்தாலோ அதை மீண்டும் கோவிலிலேயே வைத்துச் சென்றிருக்கலாம் என்ற கருத்தையும் பலர் பகிர்ந்தனர்.

மறுபுறம், சாமியாடிய பூசாரியின் மனைவி நகை இருந்த இடத்தை எவ்வாறு கண்டறிந்தார் என்பது குறித்து சிலர் ஆச்சரியம் தெரிவித்ததுடன், பல்வேறு கேள்விகளையும் எழுப்பினர். இருப்பினும், மாயமான நகை மீண்டும் கிடைத்ததே பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது.இதனைத் தொடர்ந்து தீமிதி திருவிழா எந்தவித இடையூறும் இன்றி சிறப்பாக நடைபெற்றது.

மாயமான அம்மனின் தங்கச் சங்கிலி எதிர்பாராத வகையில் மீண்டும் கிடைத்த இந்த சம்பவம், திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

You stole Amman jewel Priest wife finds 10 sovereign jewel Samiyadi whole town shocked


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->