நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு...! பஞ்சு கிடைக்காமல் தவிக்கும் உற்பத்தியாளர்கள்...! - நெருக்கடியில் திருப்பூர்!
Yarn price hiked by 7 per kg Manufacturers struggling get cotton Tiruppur crisis
திருப்பூரின் ஆயத்த ஆடைத் துறையில் பருத்தி நூல் முக்கிய முதுகெலும்பாக திகழ்கிறது. இந்தத் துறையின் இயக்கம் பெருமளவில் பருத்தி விலை மாற்றங்களால் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் நூல் விலை உயர்வு கண்ட நிலையில், ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருத்திக்கு 11 சதவீத வரிவிலக்கு வழங்கப்பட்டது.

ஆனால், டிசம்பர் மாதத்துடன் அந்த வரிவிலக்கு காலம் முடிவடைந்ததால், மீண்டும் இறக்குமதி பருத்திக்கு வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இதன் விளைவாக, உள்நாட்டு பருத்தி விலை கேண்டி ஒன்றுக்கு ரூ.4,000 முதல் ரூ.5,500 வரை உயர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த உயர்வின் தாக்கம் தொடர்ந்து நூல் விலையிலும் பிரதிபலித்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் கிலோவுக்கு ரூ.7 உயர்ந்த நூல் விலை, மார்ச் மாதத்திலும் மீண்டும் ஏற்றம் கண்டது.
மேலும், ஏப்ரல் 1-ஆம் தேதி கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. இதனால், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை நூல் விலை கிலோவுக்கு மொத்தம் ரூ.34 வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான புதிய விலையை நூற்பாலைகள் அறிவித்துள்ளன. அதன்படி, அனைத்து வகை நூல்களுக்கும் கிலோவுக்கு ரூ.7 உயர்வு செய்யப்பட்டுள்ளது. தரமான பஞ்சு கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இந்த விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது.
ஆண்டு தொடக்கத்தில் பஞ்சு கேண்டி விலை ரூ.50,000 முதல் ரூ.55,000 வரை இருந்த நிலையில், தற்போது அது ரூ.65,000 முதல் ரூ.68,000 வரை உயர்ந்து விற்பனையாகிறது.
இந்த விலை மாற்றத்துடன், 10-ஆம் நம்பர் கோம்டு நூல் கிலோவுக்கு ரூ.224, 16-ஆம் நம்பர் ரூ.234, 20-ஆம் நம்பர் ரூ.292, 30-ஆம் நம்பர் ரூ.314, 34-ஆம் நம்பர் ரூ.334, 40-ஆம் நம்பர் ரூ.352 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதேபோல், 20-ஆம் நம்பர் செமி கோம்டு நூல் ரூ.289, 24-ஆம் நம்பர் ரூ.297, 30-ஆம் நம்பர் ரூ.323, 40-ஆம் நம்பர் ரூ.342 என விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Yarn price hiked by 7 per kg Manufacturers struggling get cotton Tiruppur crisis