பொன்னேரி அரசு மருத்துவமனை ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு: தப்பியோடிய நபர் போலீசாரால் சுட்டுப் பிடிப்பு!
Woman Hospital Worker Set on Fire in Ponneri GH Attacker Shot and Arrested by Police
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும் பாக்கம் ஊராட்சி, உப்பரபாளையத்தைச் சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் வினோத் (40) என்பவரின் மனைவி ராஜேஸ்வரி (35). இத்தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ராஜேஸ்வரி பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் அவசர சிகிச்சைப் பிரிவில் தனது பணியை முடித்துக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டபோது, மருத்துவமனை வளாகத்திலேயே இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் ராஜேஸ்வரி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் தான் கொண்டு வந்த பெட்ரோலை எதிர்பாராத விதமாக ராஜேஸ்வரியின் மீது ஊற்றினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உய பயத்தில் அலறியவாறே மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கித் தலைதெறிக்க ஓடினார். இருப்பினும், விடாமல் விரட்டிச் சென்ற அந்த நபர், ராஜேஸ்வரியின் மீது தீயைப் பற்ற வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மருத்துவமனை ஊழியர்கள் போராடித் தீயை அணைத்தனர். இதைப் பயன்படுத்தி அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவத்தில் பலத்த தீக்காயமடைந்த ராஜேஸ்வரிக்கு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பொன்னேரி காவல் துறையினர் தப்பியோடிய குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
விசாரணையில் பெண் ஊழியரை எரித்துக் கொல்ல முயன்ற நபர் பிரகாஷ் என்பது தெரியவந்தது. பொன்னேரி சுடுகாட்டுப் பகுதியில் அவர் ஒளிந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அவரைப் பிடிக்கச் சென்றனர். அப்போது, பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசனை வெட்டிவிட்டுத் தப்பிக்க முயன்றார். இதையடுத்து, தற்காப்பிற்காகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரகாஷ் சுட்டுப் பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Woman Hospital Worker Set on Fire in Ponneri GH Attacker Shot and Arrested by Police