மகளிருக்கான விரிவுபடுத்தப்பட்ட 'வெற்றிப் பயணம்' இலவச பேருந்து திட்டம்: அக். 2-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்!
CM Vijay to Launch Expanded Vetri Payanam Free Bus Travel Scheme for Women on Oct 2
மாநகர மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் இயங்கும் அரசு எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ் (LSS), டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமின்றிப் பயணிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட 'வெற்றிப் பயணம்' திட்டத்தை, மகாத்மா காந்தி ஜெயந்தியான வரும் அக்டோபர் 2-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முறைப்படி தொடங்கி வைக்கவுள்ளார். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான இறுதி கட்ட முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
தற்போது 7 அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சாதாரண நகரப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ வரை இயக்கப்படும் மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மட்டுமே மகளிர் இலவசமாகப் பயணித்து வரும் நிலையில், இத்திட்டம் தற்போது கூடுதல் பேருந்து சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்படி, மாநகர மற்றும் நகர்ப்புற எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ், புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ-க்கு மேற்பட்ட மலைப்பகுதி பேருந்துகள் என மொத்தம் 12,692 அரசுப் பேருந்துகள் (மொத்தப் பேருந்துகளில் 69 சதவீதம்) இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. இதன் மூலம் நாள்தோறும் இயக்கப்படும் 1,65,312 நடைகள் (85 சதவீதம்) வாயிலாக தினமும் சுமார் 84.32 லட்சம் மகளிர் நேரடியாகப் பயனடைவார்கள்.
இத்திட்டத்திற்கான மின்னணு பயணச்சீட்டு (E-ticketing) இயந்திர இணைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 25-க்குள் இறுதிச் சரிபார்ப்புப் பணிகளும், செப்டம்பர் 27-ல் சோதனையோட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடைமுறைகள் விலக்கப்பட்ட பின்னரே இத்திட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், பணிக்குச் செல்லும் மகளிர் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காகப் பயணிப்போருக்கு இத்திட்டம் பெரும் பொருளாதாரப் பக்கபலமாக அமையும். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மு.அ.சித்திக் மற்றும் போக்குவரத்துத் துறைச் செயலாளர் இல.நிர்மல்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
English Summary
CM Vijay to Launch Expanded Vetri Payanam Free Bus Travel Scheme for Women on Oct 2