விவசாயிகளிடம் பயிர்க்கடன் வசூல் செய்யத் தடை: கூட்டுறவுத் துறை அதிரடி சுற்றறிக்கை வெளியீடு!
Cooperation Department Orders Temporary Halt on Farmer Crop Loan Recovery Mandates New Loans by Sept 30
தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க் கடன்களை வசூலிப்பதில் கடுமையான கெடுபிடிகள் காட்டக் கூடாது என்றும், நிலுவையில் உள்ள பயிர்க்கடன் வசூல் நடவடிக்கைகள் அனைத்தையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழகக் கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாகக் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் திருமதி கலதா இ.ஆ.ப. அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், கூடுதல் பதிவாளர் எஸ். சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தச் சுற்றறிக்கையில், 2026-27-ஆம் நிதியாண்டில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் வழங்குவது தொடர்பாக ஏற்கனவே தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், 'பயிர்க் கடன் தள்ளுபடித் திட்டம் 2026'-ன் கீழ் பகுதி தள்ளுபடித் தொகை பெற்ற சில விவசாயிகள், எஞ்சியுள்ள பாக்கித் தொகையை முழுமையாகச் செலுத்த முடியாமல் தவணை தவறும்போது, அவர்களிடம் கடனை வசூலிக்கக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டுப் பின்வரும் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன:
பயிர்க் கடன் நிலுவை தொடர்பாக விவசாயிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து விதமான வசூல் நடவடிக்கைகளையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.
பழைய பயிர்க் கடனை எவ்வித நிலுவையுமின்றி முழுமையாகத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு, வரும் 2026 செப்டம்பர் 30-க்குள் புதிய பயிர்க் கடன்களைத் தடையின்றி வழங்கிட வேண்டும்.
இந்த உத்தரவுகளை அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களும் தவறாமல் பின்பற்றுவதை உறுதிசெய்யுமாறு சென்னை தவிர்த்த அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கும், மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
Cooperation Department Orders Temporary Halt on Farmer Crop Loan Recovery Mandates New Loans by Sept 30