கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; நாளை சிபிஐ முன் பொருளாளர் ஆஜராவுள்ளார்; தவெக தலைவர் விஜய் ஆஜராகவில்லையா..?
Will Tamilaga Vetri Kazhagam leader Vijay not appear before the CBI tomorrow in the Karur crowd crush case
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவர் விஜய் நாளை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.விஜய்க்கு பதிலாக அவரது பொருளாளர் ஆஜராவார் என்று கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சிபிஐ அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். சமத்துவம் நடந்த வேலுசாமிபுரத்தை சேர்ந்த பொது மக்கள், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், போலீசார், தவெக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரிடமும் கடந்த 03 மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தடயவியல் துறை அதிகாரிகள் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ அதிகாரிகள், கரூருக்கு வந்து, கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் உயர்தர தொழில்நுட்ப கேமராக்களுடன் ஆய்வு செய்தனர். அத்தோடு, அன்று இரவு விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்திய வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் சென்னையில் இருந்து கரூருக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள தற்காலிக சிபிஐ அலுவலகத்தில் விஜய் பிரசார வாகனம் நிறுத்தப்பட்டது.
பின்னர், நேற்று காலை 11 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் வாகனத்தில் ஏறி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தின் மேல் விஜய் ஏறி நின்று பேசிய இடத்தை அளவீடு செய்துள்ளனர்.

அத்துடன், பேருந்தை ஓட்டிய டிரைவரான சென்னையை சேர்ந்த பரணிதரனிடம் நாமக்கல்லில் இருந்து எத்தனை மணிக்கு வாகனம் புறப்பட்டது என்றும், எவ்வளவு நேரத்தில் கரூர் எல்லைக்கு வந்தீர்கள், கரூர் எல்லையில் இருந்து கூட்டம் நடந்த வேலுசாமிபுரத்துக்கு எவ்வளவு நேரத்தில் வந்தீர்கள், எத்தனை கி.மீ. வேகத்தில் வாகனம் வந்தது, கூட்டத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் வந்தார்களா என்ற பல கேள்விகளை கேட்டுள்ளனர்.
அந்த நேரத்தில், பரணிதரன் அளித்த வாக்குமூலத்தை வீடியோவாகவும், பதிவு செய்து கொண்டனர். குறித்த விசாரணை மாலை 05 மணிக்கு முடிந்த நிலையில், மீண்டும் சென்னைக்கு விஜய் பிரசார வாகனத்தை டிரைவர் பரணிதரன் ஓட்டி வந்துள்ளார்.
இதேவேளை,சம்பவம் நடந்த போது பாதுகாப்பு பணியில் இருந்த 05 எஸ்ஐகள், தவெக நிர்வாகிகள் 05 பேர் நேற்று சிபிஐ முன் ஆஜராகிய நிலையில், அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அத்துடன், கடந்த 29, 30, 31 ஆகிய தேதிகளில் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொது செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்பி ஜோஸ் தங்கையா ஆகியோரும் டெல்லி சென்று சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஜனவரி 12-ஆம் தேதி (நாளை) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதை ஏற்று விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், விஜய்க்கு பதிலாக கட்சியின் பொருளாளர் சிபிஐ விசாரணைக்கு நாளை ஆஜராவார் என தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Will Tamilaga Vetri Kazhagam leader Vijay not appear before the CBI tomorrow in the Karur crowd crush case