தேர்தல் ஆணையத்தின் SSRக்கும் SIRக்கும் என்ன வித்தியாசம்! பறிபோகும் வாக்குகள்? உண்மையில் சிக்கலா?தேர்தல் ஆணைய முடிவுக்கு திமுக கடும் எதிர்ப்பு! 
                                    
                                    
                                   What is the difference between the Election Commission SSR and SIR Lost votes Is it really a problem DMK strongly opposes the Election Commission decision
 
                                 
                               
                                
                                      
                                            பீகாரைத் தொடர்ந்து தமிழகத்திலும் ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்’ (Special Intensive Revision – SIR) மேற்கொள்ளப்பட உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு “சிறப்பு சுருக்க முறை பட்டியல்” (Special Summary Revision) என்ற பெயரில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது. இதில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கல் போன்ற வழக்கமான பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள “சிறப்பு தீவிர திருத்தம்” என்பது முற்றிலும் வேறுபட்டது. இது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் சிறப்பு சுத்திகரிப்பு நடவடிக்கை. இதில் வாக்காளர் பட்டியல் தற்காலிகமாக நிறுத்தப்படும். அதிகாரிகள் வீடு வீடாக மூன்று முறை சென்று சரிபாரிப்பார்கள். புதிய பெயர்கள் சேர்ப்பதற்கோ திருத்தங்களுக்கோ இந்த காலத்தில் வாய்ப்பு கிடையாது. முக்கிய நோக்கம் — போலி வாக்காளர் பெயர்களை நீக்குவது.
இதே முறை சமீபத்தில் பீகார் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டபோது, சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். இதனால் அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், “இது ஜனநாயக விரோத நடவடிக்கை” என்றும், “மக்களின் வாக்குரிமையை பறிக்கும் முயற்சி” என்றும் கடுமையாக விமர்சித்தனர்.
அந்த சர்ச்சை அடங்கும் முன்பே, தேர்தல் ஆணையம் இதே முறையை தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு முதலாவதாக எதிர்ப்பு தெரிவித்தவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
அவர், “இது உழைக்கும் மக்கள், பட்டியலினத்தினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் பெயர்களை நீக்கி, பாஜக மற்றும் அதிமுகக்கு அரசியல் லாபம் கிடைக்கச் செய்யும் முயற்சி” என்று குற்றம்சாட்டினார். மேலும், “மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க திமுக சட்ட ரீதியாகவும், மக்கள் மத்தியில் நின்றும் எதிர்க்கும்” என்றும் உறுதியளித்தார்.
மற்றபுறம், அதிமுக இதை எதிர்க்கவில்லை. தேர்தல் பட்டியலை தூய்மைப்படுத்துவது தவறல்ல என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால் இந்த விவகாரம் அரசியல் வடிவம் பெற்று, திமுக – அதிமுக மோதலாக மாறியுள்ளது.
அதேசமயம், பல சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் “இந்த நடவடிக்கையின் பெயரில் உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் தவறுதலாக நீக்கப்படலாம்” என அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஏழை மக்கள், இடம் மாறி வேலை பார்க்கும் தொழிலாளர்கள், பழங்குடியினர், முதியவர்கள் போன்றோரின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கின்றனர்.
மொத்தத்தில், வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் சரியாக இருந்தாலும், அதற்காக ஒருவரின் வாக்குரிமை பாதிக்கப்படக்கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. தமிழக அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் தற்போது தீவிர விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       What is the difference between the Election Commission SSR and SIR Lost votes Is it really a problem DMK strongly opposes the Election Commission decision