'நேருவின் ஆவணங்கள் தனியார் சொத்து அல்ல: தேசத்தின் ஆவண பாரம்பரியத்தின் ஒரு பகுதி': காங்கிரஸ்-க்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அரசு..!
The central government has hit back at the Congress party stating that Nehrus documents are not private property
நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேருவின் ஆவணங்கள் தொடர்பாக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கூறியிருந்தது. 'அதுதனிப்பட்ட சொத்து அல்ல'. எனவே, சோனியாவிடம் உள்ள ஆவணங்களை அவர் ஒப்படைக்க வேண்டும் என மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேரு டில்லியில் வசித்த தீன் மூர்த்தி பவன் இல்லத்தில், அவரது நினைவாக அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வந்தது.
கடந்த 1971-இல், நேருவின் வாரிசான, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தன்னிடம் இருந்த நேரு தொடர்பான ஆவணங்களை பராமரிப்பதற்காக இந்த அருங்காட்சியகத்துக்கு வழங்கினார். மொத்தம், 51 பெட்டிகளில் நேரு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டன. இவற்றில், பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பிரிட்டிஷ் அரசின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன் உள்ளிட்டோருக்கு நேரு எழுதிய கடிதங்களும் அடங்குகின்றன.

அத்துடன், ஜெயபிரகாஷ் நாராயண், பத்மஜா நாயுடு, விஜயலட்சுமி பண்டிட், அருணா ஆசிப் அலி, பாபு ஜகஜீவன் ராம் போன்ற தலைவர்களுக்கு எழுதிய கடிதங்களும் இவற்றில் அடங்கும்.
கடந்த 1984-இல் இந்திரா காந்தி மறைவுக்குப் பின், நேருவின் வாரிசாக சோனியா காந்தி மாறினார். அதன் பின்னர், கடந்த 2008-இல், ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகம் மற்றும் நுாலகத்துக்கு வழங்கிய, 51 பெட்டிகளில் உள்ள பொருட்களை அவர் திரும்பப் பெற்ற நிலையில், தற்போது அவரது தனிப்பட்ட பராமரிப்பில் உள்ளன.
இந்நிலையில், தற்போது இந்த அருங்காட்சியகத்தை பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் என்று மத்திய அரசு பெயர் மாற்றியுள்ளது. இங்கு அனைத்து பிரதமர்கள் தொடர்பான பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, நேரு தொடர்பான கடிதங்கள் மற்றும் ஆவணங்களை திரும்ப அளிக்கும்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு, பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் கடிதம் எழுதியது. ஆனால் அவரிடம் இருந்து அதற்கு பதிலும் வரவில்லை.

இந்த சூழலில், பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் இருந்து நேரு தொடர்புடைய குறிப்பிட்ட ஆவணங்கள் ஏதும் மாயமானதா..? அல்லது அவை சட்டவிரோதமாக முறையற்ற ரீதியில் அகற்றப்பட்டதா..? என லோக்சபாவில் பாஜ எம்பி சம்பித் பாத்ரா கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெஷகாவத்,' பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் நடப்பாண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நேரு தொடர்பான ஆவணங்கள் எதுவம் மாயமானதாக கண்டறியப்படவில்லை என்றும், அருங்காட்சியகம் வசமுள்ள ஆவணங்கள் ஆண்டுதோறும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதில்லை. இது தொடர்பாக கொள்கை எதுவும் வகுக்கப்படவில்லை என பதிலளித்தார்.
இதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக்காட்டி வெளியிட்ட அறிக்கையில், 'இறுதியில் உண்மை வெளியிடப்பட்டு விட்டது. இனி மன்னிப்பு கேட்கப்போவது எப்போது,' என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பதிலடி கொடுத்து கூறியுள்ளதாவது:
''கடந்த 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி சோனியாவின் பிரதிநிதியான எம்.வி.ராஜன், முன்னாள் பிரதமர் நேருவின் அனைத்து தனிப்பட்ட குடும்ப கடிதங்கள் மற்றும் ஆவணங்களையும் சோனியா திரும்ப பெற விரும்புகிறார் என கடிதம் எழுதியிருந்தார். அதே ஆண்டு நேரு குறித்த ஆவணங்கள் சோனியாவிற்கு அனுப்பப்பட்டன.
அந்த ஆவணங்களை திரும்ப கொடுப்பது தொடர்பாக பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் ( பிஎம்எம்எல்) நிறுவனவம்,தொடர்ந்து சோனியாவுடன் தொடர்பில் இருக்கிறோம். இது தொடர்பாக 2025 ஜனவரி 28 மற்றும் ஜூலை 03 ஆகிய தேதிகளில் சோனியாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவே, நேரு குறித்த ஆவணங்கள் எங்கு இருப்பது என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால், பிஎம்எம்எல் -இல் இருந்து நேருவின் ஆவணங்கள் மாயமாகவில்லை.

இந்த ஆவணங்கள் இந்தியாவின் முதல் பிரதமர் தொடர்புடையது என்பதால், அது தேசத்தின் ஆவண பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். அவை தனிப்பட்ட சொத்து அல்ல. இந்த ஆவணங்கள் பிஎம்எம்எல் நிறுவனத்தின் வசம் இருப்பதும், அவற்றை குடிமக்கள், அறிஞர்கள் ஆராய்ச்சிக்கு அணுகுவதும் மிகவும் முக்கியமானது'. என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
The central government has hit back at the Congress party stating that Nehrus documents are not private property