வனப்பகுதிகளுக்குள் ஒரு போதும் குப்பைகளை கொட்ட கூடாது..பொதுமக்களுக்கு அரசு கொறடா அறிவுறுத்தல்!
Waste should never be dumped inside forest areas a public instruction from the government
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அரசு தலைமைக் கொறடா அவர்கள் செய்தியாளர்களிடம்தெரிவித்ததாவது:நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, நானும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் இன்றைய தினம் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டோம். இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நியாய விலைக்கடை அமைத்து தர கோரிக்கையினை முன் வைத்தனர். இதற்கு முன்பான இப்பகுதியிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க இரண்டு கி.மீ செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்ததாக தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று ஒரு வாரத்திற்குள் இப்பகுதியில் பகுதி நேர நியாய விலைக்கடை வாரத்தில் இரண்டு நாட்கள் செயல்படும் வகையில் தொடங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குண்டான நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மூலம் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள இந்த பாரதியார் நகர் இரண்டாம் வார்டு, எட்டு வார்டு மற்றும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக, வனத்துறையின் அனுமதி பெற்று சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உதகை நகராட்சியின் மூலம் இப்பகுதியில் அமைந்துள்ள கால்வாயினை முழுமையாக தூர் வார வேண்டும் எனவும், இப்பகுதியில் எல்.இ.டி மின்விளக்குகள் அமைக்க நகராட்சி மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், சீரான குடிநீர் விநியோகம் வழங்க வேண்டும் எனவும், பொதுமக்கள் நகராட்சி பணியாளர்கள் குப்பை சேகரிக்க வரும் போது தங்களது வீட்டில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை, மக்காக குப்பை என தனியாக பிரித்து வழங்க வேண்டும் எனவும், பொது இடங்கள் மற்றும் வனப்பகுதிகளின் அருகில் குப்பைகளை ஒரு போதும் கொட்ட கூடாது எனவும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது. உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், உதகை நகராட்சி பொறியாளர் சேகரன், உதவி பொறியாளர் சண்முகசுந்தரம், உதகை வட்டாட்சியர் சங்கர்கணேஷ், திட்ட குழு உறுப்பினர் ஜார்ஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
English Summary
Waste should never be dumped inside forest areas a public instruction from the government