வாலாஜாபாத்தில் பயங்கரம்...! சொத்துத் தகராறில் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் கொலை...! - திடுக்கிடும் பின்னணி என்ன...? - Seithipunal
Seithipunal


“சொத்துகள் அனைத்தையும் ஆசிரமத்துக்கு எழுதிவைத்து விடுவேன்” என்று தந்தை மிரட்டியதால் ஏற்பட்ட குடும்பத் தகராறு விபரீதத்தில் முடிந்தது. தந்தையை கத்தியால் வெட்டிக் கொன்றதாக மகனும், கொலை சம்பவத்தை மறைத்து கணவர் மாரடைப்பால் இறந்ததாக உறவினர்களை நம்ப வைத்ததாக அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் சிவபாதம், வயது 70. அரசு பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், மனைவி ரேணுகா, வயது 50, மகன் மதுசூதனன், வயது 39, ஆகியோருடன் வசித்து வந்தார்.பொறியியல் பட்டதாரியான மதுசூதனன், தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.

சிவபாதம் குடும்பத்தினருக்கு பெருங்குடி பழைய மாமல்லபுரம் சாலையில் பல்வேறு இடங்களில் சொந்தமாக வீடுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், மதுசூதனன் தனது வேலையை விட்டுவிட்டு சுமார் 10 மாதங்களுக்கு முன்பு பெருங்குடியில் உள்ள வீட்டுக்கு திரும்பினார்.

பின்னர் பெற்றோர், மனைவி, குழந்தையுடன் அங்கு வசித்து வந்தார்.குடும்பத்துக்கு சொந்தமான வீடுகளை வாடகைக்கு விட்டதில் கிடைத்த வருவாயை கொண்டு மதுசூதனன் குடும்ப செலவுகளை கவனித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிவபாதத்துக்கு மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட செலவுகள் அதிகரித்தன.இதன் காரணமாக குடும்பத்தினருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு சிவபாதம், காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த மருதம் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்று தனியாக வசித்து வந்தார்.சில நாட்களுக்கு முன்பு மருதம் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரேணுகாவும், மதுசூதனனும் அங்கு சென்றனர்.

அப்போது, “எதற்காக இங்கு தனியாக தங்கியிருக்கிறீர்கள்? தேவையில்லாமல் அதிக செலவு செய்கிறீர்கள். சென்னைக்கு வந்து எங்களுடன் இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்காது” என்று கூறி சிவபாதத்தை மீண்டும் அழைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

மேலும், சென்னையில் உள்ள வீடுகளின் மூலம் கிடைக்கும் வாடகை பணத்தை தன்னிடம் வழங்குமாறும், தனது மருத்துவம் மற்றும் அன்றாட செலவுகளுக்கு அதை பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, “எனது செலவுக்கு பணம் தரவில்லை என்றால், என் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடுவேன்” என்று சிவபாதம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், நேற்று முன்தினம் சிவபாதம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக கூறி, அவரது உடலை இறுதிச்சடங்குகளுக்காக எடுத்துச் சென்றனர்.ஆனால், சிவபாதத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வாலாஜாபாத் காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவலர்கள், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனையில் சிவபாதத்தின் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் அவரது மரணம் இயற்கையானது அல்ல என்பது தெரியவந்ததை தொடர்ந்து, காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சந்தேகத்தின் அடிப்படையில் சிவபாதத்தின் மனைவி ரேணுகா மற்றும் மகன் மதுசூதனன் ஆகியோரிடம் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது, மதுசூதனன் தனது தந்தை சிவபாதத்தை கத்தியால் கால் மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கணவர் கொலை செய்யப்பட்டதை மறைப்பதற்காக ரேணுகா, வீட்டிலும் சிவபாதத்தின் உடலிலும் படிந்திருந்த ரத்தக்கறைகளை துடைத்து சுத்தம் செய்ததாகவும், அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களிடம் கூறி நம்ப வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து வாலாஜாபாத் காவலர்கள் கொலை வழக்குப்பதிவு செய்து மதுசூதனனையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ரேணுகாவையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Walajabad Retired government bus driver murdered over property dispute What shocking background


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->