அக்டோபர் 15 முதல் UPI பரிவர்த்தனை கட்டணம்...! உடனடியாக கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிரடி வலியுறுத்தல்...!
UPI transaction fee from October 15 Communist Party India urged immediately give up
யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,"அக்டோபர் 15-ந் தேதி முதல் ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 2 விழுக்காடு வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இந்த கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சாதாரண நுகர்வோருக்கான யுபிஐ சேவை தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என்றும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வணிகர்களிடம் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டாலும், ரெயில்வே, தொலைத்தொடர்பு, பெட்ரோல் நிலையங்கள், காப்பீட்டு தவணை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட சேவைகளுக்கான ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டணங்களை யுபிஐ மூலம் செலுத்தும்போது ரூ.5 நிலையான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணம் எதிர்காலத்தில் படிப்படியாக அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. அவ்வாறு கட்டணச் சுமை அதிகரிக்கப்பட்டால், அதன் தாக்கம் இறுதியில் பொதுமக்களையே சென்றடையும்.வணிகப் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ கட்டணம் நடைமுறைக்கு வந்தால், அந்த கூடுதல் செலவை வணிகர்கள் தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சூழல் உருவாகக்கூடும்.மக்களின் அன்றாட பணப்பரிவர்த்தனைகளில் யுபிஐ முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில், அதற்கான கட்டண முறை அறிமுகப்படுத்தப்படுவது பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும், யுபிஐ சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கை, இந்தச் சேவையை வழங்கும் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு சாதகமாக அமையும் என்றும், அவர்களின் லாபத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடைமுறை அமைந்துவிடும் என்றும் அவர் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு பெருநிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் விளைவாக சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதாகவும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
எனவே, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
English Summary
UPI transaction fee from October 15 Communist Party India urged immediately give up