'உஷ்... உஷ்...' சத்தத்தால் உறைந்துபோன ஊழியர்கள்...! கடலூரில் ஏ.சி. எந்திரத்தில் சிக்கிய பாம்பு...!
Employees freeze death due sound Ush Ush snake got stuck AC machine Cuddalore
கடலூர் பகுதியில் அடுத்தடுத்து வீடுகளிலும் பணியிடங்களிலும் பாம்புகள் புகுந்த சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் ஏ.சி. எந்திரத்துக்குள் பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் ஊழியர்களை திடுக்கிட வைத்தது.

கடலூர் முதுநகர் அருகே சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று வழக்கம்போல் நிறுவனத்தின் கீழ்தளத்தில் இருந்த ஏ.சி. எந்திரங்களை ஊழியர்கள் இயக்கினர்.அப்போது ஒரு ஏ.சி. எந்திரத்தில் இருந்து வித்தியாசமான முறையில் “உஷ்... உஷ்...” என்ற சத்தம் தொடர்ந்து கேட்டது.
இதனால் ஏதோ விபரீதம் இருக்கலாம் என சந்தேகமடைந்த ஊழியர்கள், எந்திரத்தின் அருகே சென்று கவனமாக பார்த்தனர்.அப்போது ஏ.சி. எந்திரத்தின் உள்ளே ஒரு பாம்பு சுருண்ட நிலையில் பதுங்கியிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த அவர், ஏ.சி. எந்திரத்துக்குள் சுருண்டு கிடந்த சுமார் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை மிகவும் லாவகமாக பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.இதேபோல், கடலூர் அருகே கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்திலும் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஒருவரது வீட்டில் மடித்து வைக்கப்பட்டிருந்த குடைக்குள் நேற்று பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. குடையை எடுக்க முயன்றபோது அதற்குள் பாம்பு இருப்பதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதையடுத்து உடனடியாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர், குடைக்குள் பதுங்கியிருந்த சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தார்.
அடுத்தடுத்து ஏ.சி. எந்திரத்துக்குள்ளும், குடைக்குள்ளும் நல்ல பாம்புகள் பதுங்கியிருந்த சம்பவங்கள் அந்தந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Employees freeze death due sound Ush Ush snake got stuck AC machine Cuddalore