செயலி மூலம் பணம் இரட்டிப்பு மோசடி...! மேலூரில் மேலும் ஒரு பெண் அதிரடி கைது...! - பொருளாதார குற்றப்பிரிவு தீவிர விசாரணை - Seithipunal
Seithipunal


செல்போன் செயலி மூலம் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில், மேலூரை சேர்ந்த மேலும் ஒரு பெண்ணை காவலர்கள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், மோசடி தொடர்பான மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மதுரை மாவட்டம் மேலூரில் எப்.கியூ.எல். என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது.

அந்த நிறுவனத்தின் செயலி வாயிலாக ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால், 2 மாதங்களில் முதலீட்டு தொகை இரட்டிப்பாகும் என பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டன.பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை திரட்டுவதற்காக பல்வேறு பகுதிகளில் முகவர்களும் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று, அதிக லாபம் கிடைக்கும் என மக்களை நம்ப வைத்து முதலீடு செய்ய தூண்டியதாக தெரிவிக்கப்படுகிறது.ஆரம்பத்தில் முதலீடு செய்த சிலருக்கு தொகை இரட்டிப்பாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதனால், அந்த நிறுவனத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது. இதனை பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோர் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பணத்தை முதலீடு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், முதலீடுகளை பெற்றுக்கொண்ட தனியார் நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள், தங்களது பணத்தை திரும்பப்பெற முடியாமல் தவித்தனர்.பணத்தை இழந்தவர்கள் ஆத்திரமடைந்து, முதலீடுகளை பெற்ற முகவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுமட்டுமின்றி, மேலூர் வழியாக செல்லும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு, காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணையின் ஒரு பகுதியாக, மேலூர் அருகே கட்டையம்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினி ஆகியோர் கடந்த 7-ந் தேதி திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தனர்.இதையடுத்து இருவரையும் காவலர்கள் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினியிடம் காவலர்கள் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.இருவரும் சமூக வலைதளங்கள் வாயிலாக கிராம மக்களை தொடர்புகொண்டு, முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று நம்ப வைக்கும் வகையில் பேசியதாக விசாரணையில் தெரியவந்ததாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பேச்சை நம்பி ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களையும் காவலர்கள் கைப்பற்றியுள்ளனர்.மேலும், அந்த செல்போன்களின் இணையத் தொடர்பு முகவரிகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த விவரங்கள் கிடைத்த பின்னர், மோசடி நடவடிக்கையின் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்து கூடுதல் தகவல்கள் தெரியவரும் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.அதேபோல், இந்த மோசடி மூலம் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது, பணம் எங்கு சென்றது, மேலும் யார் யாருக்கு இதில் தொடர்பு உள்ளது என்பதையும் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வழக்கில் இதுவரை மதுரை மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் புகார்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரம் புகார்களும், விருதுநகர் மாவட்டத்தில் 30 புகார்களும் பெறப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த மோசடியில் காவலர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களையும், ஒவ்வொருவரும் இழந்த தொகையையும் கணக்கிடும் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன.கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், ரஞ்சித் மற்றும் அவரது மனைவியிடம் விரிவான விசாரணை நடத்துவதற்காக அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, ரஞ்சித்தின் உறவினரான மேலூர் கட்டையம்பட்டி பகுதியை சேர்ந்த ரேவதி, வயது 35, என்பவர் இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தார்.இதையடுத்து அவரையும் காவலர்கள் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த உள்ளனர். ரேவதியிடம் நடத்தப்படும் விசாரணையின் மூலம் இந்த மோசடி தொடர்பாக மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Money doubling scam through app Another woman arrested Melur Economic Crimes Unit investigating intensively


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->