இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம்... அதிமுகவினர் மூவர் கைது!
viruthunagar iridiyam scam admk person arrested
விருதுநகரில் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிமுகவினர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூரைச் சேர்ந்த அதிமுக 8வது வார்டு கழகச் செயலாளர் பட்டுராஜன் (52), கட்சி உறுப்பினர் கந்தநிலா (55), ராணி நாச்சியார் (53) ஆகியோர் இணைந்து ஒரு தனியார் அறக்கட்டளை மூலம் மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள், விருதுநகர் வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் உள்ளிட்ட பலரிடம் “இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்” என கூறி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பழனியப்பன் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
புகாரில், இவர்களால் மொத்தம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதுடன், தன்னிடம் மட்டும் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டதாக பழனியப்பன் தெரிவித்துள்ளார். இதையடுத்து மூவர்மீதும் விருதுநகர் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
நேற்று நள்ளிரவில் பட்டுராஜன், கந்தநிலா, ராணி நாச்சியார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ஐயப்பன், அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் அனுப்ப உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட பட்டுராஜன், சேத்தூர் பேரூராட்சி 8வது வார்டு கழகச் செயலாளர், செட்டியார்பட்டி பூத் கமிட்டி பொறுப்பாளர், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சி பொறுப்புகளில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
viruthunagar iridiyam scam admk person arrested