இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு; வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி; போராட்டம் இத்துடன் ஓயாது என பேட்டி..!
Vaikos case seeking lifting of ban on LTTE in Hindi dismissed
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-இல் ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. அத்துடன், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2014-இல் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதித்த தடையை நீட்டிக்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.சுதீர்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜராகிய வைகோ; இலங்கையில் பெண்கள், குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் கொத்து கொத்தாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள தமிழ் கோயில்கள் இடிக்கப்பட்டு, இனப்படுகொலை தொடர்கிறது. இதை மத்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது என்று பேசியுள்ளார்.

மேலும், இந்த சூழலில், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தடை விதிப்பது ஏற்புடையதல்ல என்றும், ஆகையால் அந்த தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதனையடுத்து, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர் வெங்கடசாமி பாபு ஆகியோர் வாதிடுகையில், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தற்போது 05ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கடந்த 2024-ஆம் ஆண்டு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், வைகோ 2014-இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார் என்று தெரிவித்தனர்.
எனவே, அந்த உத்தரவே காலாவதியாகிவிட்ட நிலையில், இந்த வழக்கும் செல்லத்தக்கதல்ல என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், வைகோ பாதிக்கப்பட்ட நபரும் அல்ல என்று சுட்டிக்காட்டியதோடு, டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே வைகோவின் ஆட்சேபனை மனுவை நிராகரித்துள்ளமையும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசும் போது கூறியதாவது: நான் எப்போதும் விடுதலைப் புலிகள் ஆதரவாளன்தான். உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சொந்தங்களுக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நான் தொடர்ந்த வழக்கை இந்த நீதிமன்றம் இத்தனை ஆண்டுகள் கழித்து தள்ளுபடி செய்துள்ளது என்றும், இதில் நான் தோல்வி அடையவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் ஈழத்துக்காக போராடும் போராளிகளின் உண்மை நிலவரத்தை இந்த வழக்கின் மூலமாக உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து பதிவு செய்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தப் போராட்டம் இத்துடன் ஓயாது என்றும், இன்னும் சில மாதங்களில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில், கல்லூரிகள் தோறும் சென்று புத்தகங்கள், சிடி-க்களை விநியோகம் செய்து, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்வேன் என்று தெவித்துள்ளார்.
English Summary
Vaikos case seeking lifting of ban on LTTE in Hindi dismissed