பெண் போலீசை வேனில் இழுத்துச் சென்ற தனியார் நிறுவன ஓட்டுநர் - போலீசார் அதிரடி.!
van driver arrested for dragging female police in chennai
பெண் போலீசை வேனில் இழுத்துச் சென்ற தனியார் வேன் ஓட்டுநர் - போலீசார் அதிரடி.!
சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் ஜீவா. இவர் நேற்று முன்தினம் இரவு கேளம்பாக்கம் வீராணம் சாலையில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்த போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் வேன் ஒன்று புதுப்பாக்கத்தில் இருந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு திருப்போரூர் நோக்கிச் சென்றது. இந்த வேனை மானாம்பதியை சேர்ந்த பெருமாள் என்பவர் ஓட்டி வந்துள்ளார். குடிபோதையில் இருந்த பெருமாள் தொடர்ச்சியாக ஹாரன் அடித்துள்ளார்.

உடனே பெண் காவலர் ஜீவா பெருமாளைக் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாள், பெண் காவலர் ஜீவா மீது மோதுவது போல் வேனை ஓட்டி அவர் மீது உரசியபடி சென்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜீவா வேனுக்குள் ஏற முயன்றார். அதற்குள் வேன் வேகமாகச் சென்றதால், வேனின் படிக்கட்டை பிடித்து தொங்கிய நிலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை வேனின் குறுக்கே நிறுத்தி ஜீவாவை மீட்டு, கேளம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி அங்கு வந்த போலீஸார், காயமடைந்த பெண் போலீஸ் ஜீவாவை சிகிச்சைக்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து வேன் ஓட்டுநர் பெருமாளை கைது செய்து வேனையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீஸை வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
van driver arrested for dragging female police in chennai