"டிடிவி தினகரன் எங்களுடன் தான் இருக்கிறார்.. அதில் சந்தேகமே வேண்டாம்"! அடித்து சொல்லும் நயினார் நாகேந்திரன்!
TTV Dhinakaran is with us there is no doubt about it Nayinar Nagendran says it out loud
சென்னை: அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டது. அப்போது பாஜக தலைமையிலான NDA கூட்டணியில், அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக தலைவர் டிடிவி தினகரனும் இணைந்து போட்டியிட்டனர். ஆனால், அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளுக்குப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கிடைக்கவில்லை. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வமும் தோல்வியடைந்தார்.
இந்த சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக–அதிமுக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், “அடுத்த அரசு தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியாகவே அமையும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், NDA கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தொடர்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்தது. குறிப்பாக, ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில், பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கோரியபோது அது மறுக்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ் தரப்பினர் பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதற்கிடையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “2024 தேர்தலில் நிபந்தனையின்றி மோடிக்கு ஆதரவு அளித்தோம். ஆனால் இப்போது NDA கூட்டணியில் உள்ளோமா இல்லையா என்பதை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கினால் நமக்கும் தெளிவாக இருக்கும்” எனக் கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களிடம்,“டிடிவி தினகரன் நாடாளுமன்றத் தேர்தலில் தொடங்கி இன்று வரை NDA கூட்டணியில்தான் உள்ளார். அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறார். சந்தேகமே வேண்டாம். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்தினோம். திமுகக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்பதே எங்களின் குறிக்கோள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர்,“முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சுற்றிப்பார்த்து வந்ததாகச் சொல்கிறார். ஆனால் முதலீடு எதுவும் வரவில்லை. நான் கேட்ட வெள்ளை அறிக்கை இன்னும் வரவில்லை. வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை தான் வரும்” எனக் கிண்டல் செய்தார்.
English Summary
TTV Dhinakaran is with us there is no doubt about it Nayinar Nagendran says it out loud