திருச்சி காவலர் குடியிருப்பில் பயங்கரம்: வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை!
trichy younster murder
திருச்சி பீமா நகர் கீழத் தெருவைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (27) என்ற தனியார் நிறுவன ஊழியர், இன்று காலை வேலைக்குச் செல்லும் வழியில் பட்டப்பகலில் பயங்கரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். ஒரு வருடத்திற்கு முன்புதான் இவருக்குத் திருமணம் நடைபெற்றது.
பீமா நகர் பழைய தபால் நிலையச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாமரைச்செல்வன் மீது, எதிர்த் திசையில் இரண்டு வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மோதி அவரை கீழே தள்ளியது. ஆயுதங்களுடன் அந்தக் கும்பல் வருவதைப் பார்த்த தாமரைச்செல்வன், உயிர்ப்பயத்தில் அங்கிருந்து அலறியடித்து ஓடி, அருகில் இருந்த காவலர் குடியிருப்புக்குள் நுழைந்தார்.
தில்லை நகரில் பணிபுரியும் காவலர் செல்வராஜ் என்பவரின் வீடு திறந்திருந்ததால், தாமரைச்செல்வன் அந்த வீட்டிற்குள் நுழைந்து கிரைண்டர் அருகே ஒளிந்து கொண்டார். ஆனால், அந்தக் கும்பல் விடாமல் வீட்டுக்குள் நுழைந்து, காவலர் குடும்பத்தினர் கண்முன்னேயே அவரை சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த தாமரைச்செல்வன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள், கொலையாளிகளைக் கல்லால் தாக்கியுள்ளனர். இதில், கொலையாளிகள் தரப்பில் ஒருவர் பிடிபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்தக் கொலை சம்பவம், பொதுமக்கள் முன்னிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்திருக்கும் நேரத்தில், அவர் இருந்த இடத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.