நொடிப்பொழுதில் நிகழ்ந்த விபரீதம்...! - காஞ்சிபுரம் அருகே பேருந்து விபத்தில் அலறித்துடித்த தொழிலாளர்கள்...!
tragedy that happened instant Workers screamed bus accident near Kanchipuram
நள்ளிரவு நேரத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற கனரக லாரி மீது திடீரென பயங்கரமாக மோதியதில் பேருந்தின் முன்பகுதி உருக்குலைந்தது. காஞ்சிபுரம் அருகே நடந்த இந்த கோர விபத்தில் பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் சார்ஜர் தயாரிக்கும் பிரபல தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களை அழைத்துச் செல்வதற்காக இயக்கப்படும் தொழிற்சாலை பேருந்து, இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் ஆரணி பகுதியில் இருந்து புறப்பட்டது.பேருந்து சந்தவேலூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கனரக லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது.மோதல் பயங்கரமாக இருந்ததால் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. உள்ளே அமர்ந்திருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி வலி தாங்க முடியாமல் அலறினர். நள்ளிரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விபத்தின் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் காவலர்களும் அங்கு சென்று, பொதுமக்களுடன் இணைந்து பேருந்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்களில் ஆரணியைச் சேர்ந்த ரம்யா, 21, முப்பதுவெட்டி பகுதியைச் சேர்ந்த சித்ரா, 35, நெமிலியைச் சேர்ந்த கார்த்திகா, 23, ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.லாரி ஓட்டுநர் மற்றும் லேசான காயமடைந்த 7 தொழிலாளர்கள் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர். மற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நள்ளிரவு நேரத்தில் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஓட்டுநர் கண் அயர்ந்ததால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் மீது மோதியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.இதுதொடர்பாக சுங்குவார்சத்திரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநரின் கவனக்குறைவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
tragedy that happened instant Workers screamed bus accident near Kanchipuram