உதவித்தொகை வாங்க வந்த ஏழையிடம் கைநீட்டிய அவலம்...! ரூ.1,000 லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி கையும் களவுமாக கைது...!
tragedy reaching out poor person who came receive scholarship female officer arrested red handed demanding bribe 1000
தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும், இரண்டு பெண் குழந்தைகள் கொண்ட குடும்பங்களுக்கு சேமிப்பு பத்திரம் வழங்கும் நலத்திட்டத்தில், விண்ணப்பத்தை பரிந்துரைக்க லஞ்சம் கேட்டதாக சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஒருவர் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் இந்த நலத்திட்டத்தின் மூலம், தகுதியுள்ள குடும்பங்களுக்கு பெண் குழந்தைகளின் எதிர்கால நலனை உறுதிப்படுத்தும் வகையில் சேமிப்பு பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் பயனை பெற விரும்புவோர், தாங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட சமூக நலத்துறை விரிவாக்க அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு பரிந்துரையுடன் அனுப்பப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.இந்த நிலையில், காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த சிவா ஆனந்த் என்பவர், இந்த நலத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயராணியை சந்தித்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பத்தை ஆய்வு செய்து, மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்புவதற்காக ரூ.1,000 லஞ்சம் வழங்க வேண்டும் என ஜெயராணி கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு உடன்பட மறுத்த சிவா ஆனந்த், இந்த விவகாரம் குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்களிடம் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து, காவலர்களின் ஆலோசனையின்படி ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூ.1,000 நோட்டுகளை சிவா ஆனந்த், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஜெயராணியிடம் வழங்கினார்.
பணத்தை அவர் பெற்றுக்கொண்ட உடனே, அங்கு மறைந்து கண்காணித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் விரைந்து சென்று, ஜெயராணியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.இதனைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக சட்டப்படி வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகள் மீது லஞ்சப் புகார்கள் உறுதியானால், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
tragedy reaching out poor person who came receive scholarship female officer arrested red handed demanding bribe 1000