புலவர்' திரு.கு.கலியபெருமாள் படையாட்சி நினைவு தினம்!. - Seithipunal
Seithipunal


தமிழ் இனத்திற்கானவே வாழ்நாள்களை தியாகம் செய்த தன்னிகற்ற இனவிடுதலை  தமிழ்தேசிய பொதுவுடமை போராளி 'புலவர்' திரு.கு.கலியபெருமாள் படையாட்சி அவர்கள் நினைவு தினம்!.

புலவர் கு. கலியபெருமாள் (.மார்ச் 04,.1924 - மே 16, 2007) என்பவர் பகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய  போராட்டம் என  தன் குடும்பத்தையே தமிழர் இனத்தின் விடுதலைக்காக போராட்டத்தில் இணைத்து குடும்பத்துடன் தண்டனையும் பெற்று இனத்திற்கானவே வாழ்நாட்களை தியாகம் செய்த தன்னிகற்ற இனவிடுதலை போராளியாவார்.

 இந்திய அளவில் நக்சலைட் இயக்கத்தை ஆரம்பித்த சாரு மஜூம்தார் தமிழகத்திற்கு வந்தபொழுது. அவரைப் பெண்ணாடம் அருகில் உள்ள முந்திரிக் காட்டுக்கு வரவழைத்து இரகசியமாகக் கூட்டம் போட்டார் கலியபெருமாள். சாருமஜூம்தார் தோற்றுவித்த இ.ம.க.(மா.லெ) இயக்கம் தமிழகத்தில் வேரூன்றக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் கலியபெருமாள் படையாட்சி.

 ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, பெரும் நிலப்பிரபுக்களின் நிலங்களுக்குத் தனது தோழர்களுடனும், பொது மக்களுடனும் திரண்டு சென்று அதிரடியாக அறுவடை நடத்தி நெல் மூட்டைகளைக் கடத்தி வந்து கிராமத்தினருக்குப் பகிர்ந்து கொடுத்தார். பெண்ணாடம் பகுதி சர்க்கரை ஆலைகளுக்கு எதிரான போராட்டங்களையும் தலைமையேற்று நடத்தினார்.

 1970 ம் வருடம் அவரது சொந்தக் கிராமமான செளந்திரசோழபுரத்தில் உள்ள தனது தோப்பில் கணேசன், காணியப்பன், சர்ச்சில் ஆகிய மூன்று இளைஞர்கள் இவர் முன்னிலையில் தற்பாதுகாப்புக்காக வெடிகுண்டு தயாரித்தபொழுது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து மூன்று இளைஞர்களும் அதே இடத்தில் சிதறிப்போனார்கள். அருகில் இருந்த கலியபெருமாளுக்கும் பலத்த காயம். இறந்துபோன மூன்று தீவிரவாத இளைஞர்களின் உடல்களையும் அருகிலேயே புதைத்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார் கலியபெருமாள் படையாட்சி.

 1971-ல் கலியபெருமாள் படையாட்சியும்,அவரது மகன்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல்துறை உளவாளி ஐயம்பெருமாள் கொலை வழக்கில் 1972 ஆம் ஆண்டு கலியபெருமாளுக்கும் அவரது மூத்த மகன் வள்ளுவனுக்கும் மரணதண்டனையும், இளையமகன் சோழ நம்பியார், கலிய பெருமாள் படையாட்சியின் ஒன்றுவிட்ட தம்பிகள் மாசிலாமணி, இராஜமாணிக்கம், ஆறுமுகம் கலியபெருமாள் படையாட்சியின் மனைவியின் அக்காள் அனந்தநாயகி ஆகியோருக்கு ஆயுள் தண்டணையும் கடலூர் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது. ஆக மொத்தம் அவரது குடும்பமே சிறையில். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வள்ளுவனுக்கு ஆயுள் தண்டனை என்றும் மற்றவர்களுக்கு அதே தண்டனை என்றும் உறுதிசெய்யப்பட்டது. கலியபெருமாள் படையாட்சியை மரணதண்டனையிலிருந்து காக்க பலரும் போராடி, கையெழுத்து இயக்கம் நடத்தி இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பினர் 1973இல் குடியரசு தலைவர் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.

1981இல் கலியபெருமாள் படையாட்சிக்கும் அவர் குடும்பத்தினர் ஆக ஏழு பேர் சிறையில் வாடுவதை அறிந்த டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் "கன்ஷியாம் பர்தேசி" என்பவர் நேரில் வந்து சந்தித்து பின் மனித உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவர்கள் அனைவரையும் 1983 ஆம் ஆண்டு நிபந்தையற்ற நீண்டகால பரோலில் வெளியே மீட்டு வந்தார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து அதே நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தண்டனையில் இருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டனர். தமிழகத்தில் நக்சல் இயக்கத்தைத் துவக்கிய இவர் பிறகு தமிழ்த் தேசியராக மாறினார் .

 கலியபெருமாள் படையாட்சி 2007 ஆம் ஆண்டு மறைந்தார். அவரின் உடல் பெண்ணாடம் அருகேயுள்ள அவரது சொந்த ஊரான சௌந்தரசோழபுரத்தில், 22-2-1970-இல் அவரது தோழர்கள் சர்ச்சில், கணேசன், காணியப்பன் மரணம் எய்திய அதே இடத்தில் கலியபெருமாள் படையாட்சியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அவ்விடம் `தென்னஞ்சோலை செங்களம்' என அழைக்கப்படுகிறது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today is the remembrance day of Puhalvar Thiru Ku.Kaliyaperumal Regiment


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->