இதெல்லாம் ரொம்ப தப்பு ஆபிஸர்..!! பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பலே நாடகம்..!!
TNgovt school Principals invited for logo launch ceremony
தமிழகம் முழுவதில் உள்ள குறிப்பிட்ட சில அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 680 பேர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் நேற்று (டிச.14) காலை 10 மணிக்குள் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
எதற்காக அழைக்கிறார்கள் என்ற எந்த ஒரு விவரமும் தெரியாமல் பதறிப்போன தலைமை ஆசிரியர்கள் ரயில் மூலமும் பஸ் மூலமும் கிடைத்த வாகனங்களில் அடித்து பிடித்து சென்னைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். அவர்களிடையே "சமீபத்தில் நடந்த பொது தேர்வு தேர்ச்சி பற்றி ஆய்வு கூட்டமாக இருக்கும்" என யாரோ புரளி கிளப்பி விட்டனர். இதனால் அனைத்து தலைமை ஆசிரியர்களும் பதட்டமான மனநிலையில் கூட்ட அரங்கில் காத்திருந்தனர்.

அப்பொழுது அங்கு வந்த பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் ஜெயக்குமார், ராமசாமி, நரேஷ் ஆகியோர் வழக்கமான கல்வித்துறை ஆய்வுக் கூட்டங்களில் பேசும் அறிவுரைகளை மட்டுமே தெரிவித்துவிட்டு "இது தேர்ச்சி சதவீதம் குறித்த ஆய்வுக்கூட்டம் இல்லை, உங்களை கண்டிக்கப் போவதும் இல்லை" என மறுபடியும் ஒரு ட்விஸ்ட் வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
இதனால் தலைமை ஆசிரியர்கள் குழுப்பத்தின் உச்சிக்கே சென்றனர். அதற்குள் மதிய சாப்பாடு தயாராகி விட்டதால் அனைவரும் சாப்பிட அழைக்கப்பட்டனர். அனைத்து தலைமை ஆசிரியர்களும் மதிய உணவு முடித்துவிட்டு பகல் 3 மணி வரை காத்திருந்தனர். அப்பொழுது உதயநிதி ஸ்டாலினின் பதவி ஏற்பு விழாவை முடித்துவிட்டு பொறுமையாக கூட்ட அரங்கிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமையாசிரியர்கள் மீண்டும் குழம்பினர்.

நிகழ்ச்சியின் மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் "வரும் ஜனவரி 6ஆம் தேதி தமிழக அரசு சார்பில் இலக்கிய விழா நடைபெறுகிறது. அதில் உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்" என பேசிவிட்டு விழாவிற்கான லோகோ வெளியிட்டார். அப்பொழுதுதான் அனைவருக்கும் தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கையை அமைச்சருக்கு காட்டுவதற்காக அதிகாரிகள் இப்படி ஒரு நாடகம் நடத்தியது தெரியவந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் அழைக்கப்பட்டதால் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளுவதில் பெரும் சவாலாக இருந்தது. எதற்காக அழைக்கிறோம் என்பதை கூட தெரிவிக்காத அதிகாரிகள் கடைசி வரை எங்களை மன உளைச்சலுடன் வைத்திருந்தது கொடுமையான செயல் என தலைமை ஆசிரியர்கள் புலம்பியுள்ளனர்.
English Summary
TNgovt school Principals invited for logo launch ceremony