விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை: 5,400 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!
TN Transport Department Deploys 5400 Special Buses for Vinayakar Chathurthi and Long Weekend Travel
வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் வார இறுதி தொடர் விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி சென்று வர வசதியாக தமிழகம் முழுவதும் 5,400 சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னையின் முக்கியப் போக்குவரத்து முனையமான கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இன்று 585 பேருந்துகளும், வெள்ளிக்கிழமை 1,255 பேருந்துகளும், சனிக்கிழமை 1,030 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 650 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
அதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 240 பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமையன்று 105 பேருந்துகளும் இயக்கப்படும். மாதவரம் முனையத்திலிருந்து கள்ளக்குறிச்சி, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் 110 சிறப்புப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இயக்கப்படவுள்ளன.
இதுதவிர பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவையிலிருந்தும் பிற இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பண்டிகை விடுமுறை முடிந்து பயணிகள் செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்காகக் கூடுதல் வசதியாக 765 சிறப்புப் பேருந்துகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
விடுமுறை நாட்களை முன்னிட்டு இதுவரை 90,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பயணங்களைச் சீராகத் திட்டமிடவும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் செயலி வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளுமாறு போக்குவரத்துத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
English Summary
TN Transport Department Deploys 5400 Special Buses for Vinayakar Chathurthi and Long Weekend Travel