மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு: தீவிர சிகிச்சையில் மருத்துவர்கள்!
TVK MLA VS Babu Hospitalized Due to Respiratory Distress Expected to Be Discharged Soon
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியுமான வி.எஸ்.பாபு, திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று, கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. மிகச் சுறுசுறுப்பாகப் பங்கேற்று வந்தார். தொடர் கூட்டத்தொடர் மற்றும் தொகுதி சார்ந்த மக்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால், அவருக்குக் கடந்த சில நாட்களாகக் கடுமையான மார்பு சளி பாதிப்பு இருந்துள்ளது. உடல நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து பணிகளில் கவனம் செலுத்தி வந்த நிலையில், நேற்று இரவு அவருக்குத் திடீரெனக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் அவரை உடனடியாகச் சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் முதலுதவி அளித்து, மார்பு சளியைக் குறைப்பதற்கான தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். மூச்சுத் திணறலைக் கட்டுப்படுத்தத் தேவையான உரிய மருத்துவ முறைகள் மூலம் அவருக்குத் தொடர்ந்து கண்காணிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சைகளுக்கு அவர் நன்றாகப் பதிலளித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சளி பாதிப்பினால் ஏற்பட்ட தற்காலிக மூச்சுத் திணறல் மட்டுமே என்பதால், தேவையான பரிசோதனைகளுக்குப் பிறகு இன்று அல்லது நாளை அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப தவெக தொண்டர்களும் ஆதரவாளர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
TVK MLA VS Babu Hospitalized Due to Respiratory Distress Expected to Be Discharged Soon